தமிழரின் காணிகளைபறிக்கும் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும்!

54shares

ஏமாற்று வேலைகள் மூலம் தமிழ் மக்களுடைய காணிகளை பறித்து ஏனைய இன மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம் அமைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அனுமதியளித்துள்ள நிலையில் துராராசா ரவிகரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.

எனினும் இந்த நடவடிக்கையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தமக்கான வீட்டுத்திட்டம் இடடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள மக்கள் இன்றைய தினமே ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 1934 ஆம் ஆண்டு தமது மூதாதையர்கள் அங்கு தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாம் அங்கே வாழ்ந்து வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாக குறிப்பிடும் அவர்கள்,அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் காணப்படுவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த சிங்கள மக்களது வீட்டுத்திட்ட பிரச்சனைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட முகாமையாளர் மேலதிக மாவட்ட செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர், ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச்சஸ் காணியில் 62 வீடுகள் அமைப்பதற்கு கடந்த 13 ஆம் திகதி அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகசந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஒரு தனியார் காணி சுற்றாடலில் 03ஏக்கர் காணி மாத்திரம் எவ்வாறு அரசகாணியாக வரமுடியும் என கேள்வி எழுப்பினார்.

மக்கள் பயந்த சூழ்நிலையில்தான் முகத்துவாரத்தில் உள்ள காணிகளை உரிமைகோர வரவில்லையே தவிரஇந்த காணிகளுக்கு உரிமையாளர்கள் உரிமைகோர வரும்போது அன்று அவர்களுக்கு என்ன பதிலை அரசாங்கம் சொல்லப் போகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை குறித்த பகுதியிலுள்ள காணிக்கான உறுதிப்பத்திரம் தங்களிடம் காணப்படுவதாகவும் அதனை தமக்கு பெற்றுக்கொடுக்குமாறும் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தனக்கென சொந்த காணியொன்றை கொண்டுள்ள ஒருவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...