அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; கூட்டமைப்பும் ஆதரவு வழங்க தீர்மானம்!

555shares

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி யினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கத் தீர்மானித்திரு க்கின்றது.

இந்தத் தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு இராணுவ தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருப்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுத்தம் பிரயோகித்ததாக அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை தாரிகள் உட்பட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக தொடர்ச்சியாக குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு பதவியினை பறிப்பதற்காக அவர் மீது நம்பிக்கை யில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்ன தேரர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை துரிதமாக கையளிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதற்கமைய நேற்று முன்தினம் ஒரு தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, மகிந்தானந்த அழுத்கமகே, நாமல் ராஜபக்ச, சதாசிவம் வியாழேந்திரன், எஸ்.பி திசநாயக்க உள்ளிட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னதாக கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஒன்றிணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மே மாதம் 16 ஆம் திகதியான இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய விடம் கையளிக்கப்பட்டது.

இந்த பிரேரணையில் சுமார் 10 விடயங்கள் குறிப்பிடப்பட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது குண்டு தாக்குதல் மேற் கொண்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக இராணுவ தளபதி 2019 மே மாதம் 5 ஆம் திகதி சிலுமின பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூறியிருந்த குற்றச்சாட்டு,

சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இம்சான் அஹமட் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலைக்கு வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் ஊடாக வெற்று ரவை கோதுகளை வழங்கியமை

அமைச்சர் ரிஷாட்டுக்கு நெருக்கமானவரான அல்ஹாச் மொஹமட் இப்ராஹிம் யூசுப் இப்ராஹிமின் இரண்டு மகன்களும் தற்கொலை குண்டுதாரிகளாக செயற்பட்டடிருந்தமை

அமைச்சரின் ஆலோசகராக செயற்பட்ட மௌலவி ஒருவர் பயங்கரவாத சந்தேக நபரில் ஒருவராக கைது செய்யப்பட்டுள்ளமை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அழுத்தங்களை பிரயோகித்ததாக பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்களால் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம்...

பயங்கரவாதிகளுடன் அமைச்சருக்கு தொடர்பு உள்ளமை பல்வேறு காரணங்களின் ஊடாக உறுதிப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பொலிஸார் அமைச்சரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதில் பின்னிற்பது

ரிசாட் தொடர்ந்தும் அமைச்சு பதவியை வகிப்பதன் காரணமாக விசாரணைகளில் ஏற்படக்கூடிய அழுத்தங்கள்

இவ்வாறான காரணங்களை ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களாக முன்வைத்துள்ளனர்.

இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றது.

இந்தத் தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க