றிசாட்டின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள்: மூடி மறைத்த பாதுகாப்பு தரப்பினர்! வெளியாகிய உண்மை

166shares

மன்னார் - தாராபுரத்தில் அமைந்துள்ள, கைத்தொழில், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதினின் வீட்டிலிருந்து சட்டவிரோத வாகன தகடுகள் கைப்பற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மீட்கப்பட்ட வாகனத் தகடுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மன்னார் - தாராபுரம் பகுதியிலுள்ள அவரது வீட்டை கடந்த 6 ஆம் திகதி பகல் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்த பாதுகாப்பு படையினர், வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலே அமைச்சர் றிசாட்டின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத வாகன தகடுகள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் கூட்டு எதிர்க் கட்சியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்தக வணிக அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்கப்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க