’எனக்கும் தங்கைக்கும் இடையில் அப்பா சரிந்து விழுந்தார்’ தந்தையை கண்முன்னே பறிகொடுத்த பிள்ளைகளின் கண்ணீர் கதை!

1090shares

இலங்கையில் அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதல் பாரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய நிலையில் அன்றைய நாளில் நடந்த பல்வேறுபட்ட துயர் நிறைந்த சம்பவங்களும் பகிரப்பட்டுவருகின்றன.

அந்தவகையில், கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னரும் மனிதமே அற்றுப்போன மிருகத்தனமான செயல்களும் அரங்கேறியிருக்கின்றன. அந்த நெஞ்சை உருக்கும் தருணங்களை முகநூலில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவினை இங்கு இணைக்கின்றோம்.

மீபத்தில் கொழும்பில் நடந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த ஒரு நண்பியிடம் போயிருந்தேன். அவ தன் கணவரை இழந்ததுடன் இரண்டு இளம் பெண் பிள்ளைகளுக்கு, காதில் செவிப்பறையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டு நொந்து போனேன்.

அந்த மகள் சொன்ன உண்மை நிகழ்வு, இப்படியும் மனிதர்களா என்று ஒரு அதிர்ச்சியை மனதில் ஏற்படுத்தியது....

Aunty, காலை 8 மணிக்கு நானும் தங்கச்சியும் அப்பாவுடன் தேவாலயத்தினுள் நுழைந்தோம். ஈஸ்டர் பெருநாள் ஆனதால் அம்மா வீட்டில் சமைப்பதாக நின்று கொண்டார். நானும் தங்கையும் அப்பாவுடன் அந்தோனியார் கோவிலுக்குச் சென்றோம்.

சரியாக 8.45 மணியளவில், இனி வீட்டுக்குப் போகலாமே என நினைத்து அங்கு சுவரில் இருந்த மணிக்கூட்டை பார்க்கவும், என்னவென்றே புரியாத காதைப் பிளக்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த இடம் சுடுகாடாகியது. முன் பின் அக்கம் பக்கம் உயிரற்ற உடல்களே சிதறிக் கிடந்தன. எனக்கும் தங்கைக்கும் இடையில் அப்பா சரிந்து விழுந்து கிடந்தார்.

நானும் தங்கையும் கதறி அழுதபடி அப்பாவைத் தூக்க முயன்றோம். அப்போதுதான் ஆள் ஆளுக்கு உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். நானும் தங்கையும் அங்கு வந்தவர்களை கெஞ்சினோம், அப்பாவை தூக்கி வெளியே கொண்டு வர உதவும்படி. யாரும் சட்டை செய்யவில்லை. அவர்கள் அங்கு இறந்து கிடந்த உடல்களை படம் எடுப்பதிலும், வீடியோ எடுப்பதிலும் மும்முரமாக இருந்தனர்.

ஆவேசம் வந்த தங்கை படம் எடுத்த ஒருவரின் கைபேசியைப் பறித்து எறிந்தாள். அதற்கு இருவர் சண்டைக்கு வந்தனர். அவ்வேளை உள்ளே ஒரு பாதிரியார் ஓடி வந்தார். எமக்கு உயிர் வந்தமாதிரி இருந்தது.

நான் ஓடிச்சென்று " ஐயோ பாதர் அப்பாவை தூக்க ஒருக்கா உதவி செய்யுங்கோ என்று அழுதேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு நேரே சென்று மாதாவின் சுருவம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடினார்.

உடலெல்லாம் வலுவிழந்து யாருமே உதவுகிறார்கள் இல்லையே என்று பைத்தியமாக மனம் அரற்றியது. அப்போது சிவந்த நிறமுடைய ஒருவர், அருகில் இருந்த பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கு வந்தவராக இருக்க வேண்டும், நெற்றியில் விபூதி இருந்தது. உள்ளே வந்தார். அவரை நோக்கி ஓடினோம். அவர் நான் வருகிறேன் என்று கூறியபடி வந்து எம்முடன் சேர்ந்து அப்பாவைத் தூக்கி ஆலயத்தின் வெளியே கொண்டு வந்தார். தங்கை அப்பாவுடன் நிற்க, நான் ஓடிச் சென்று தெருவில் சென்ற ஓட்டோக்களை மறித்தேன். அதிலும் எமக்குத் தோல்வி தான். யாரும் நிற்பாட்டவில்லை.

இதற்கிடையில் ஆலயத்தின் உண்டியல் பிளந்து கிடந்தது. இன்னொரு சாரார் அதை அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்டேன். இறுதியில் சிவன் கோவில் அருகில் இருந்த காளி கோவிலில் ஒரு ஓட்டோ நிற்பதைக் கண்டு, அங்கு ஓடிச் சென்று, அந்த ஓட்டோ அண்ணரிடம் , " நீங்கள் வந்தே தீரவேண்டும் இல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து வலுக்கட்டாயமாக அவரை இழுத்து ஆலயம் அருகில் அழைத்துச் சென்றேன்.

அப்போது நான் அழுதழுது ஓட்டோ அண்ணருடன் கதைத்ததை பார்த்த ஒருவர் தானும் ஓட்டோவில் ஏறிக் கொண் டார் எனக்கு உதவுவதாக. நான் நன்றி உணர்வுடன் அவருடன் சென்று, அப்பாவைத் தூக்கி ஓட்டோவில் ஏற்றியதும், புதிதாக ஏறியவர், தான் அப்பாவை வைத்தியசாலையில் சேர்ப்பதாயும் எம்மை வீட்டுக்குச் சென்று அம்மாவுக்கு அறிவிக்கும்படியும் சொன்னார்.

அதன்படி அந்த நபரும் ஓட்டோ அண்ணருமாக அப்பாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். நானும் தங்கையும் ஆலயத்தை கடந்து, தெருவின் மறுமுனையில் இருந்த கடைகளின் முன் இரத்தக் கறைகளுடன் நின்று அம்மா வுக்கும் மாமாவுக்கும் போன் பண்ணிவிட்டு அழுதபடி காத்திருந்தோம். அப்போது அந்தக் கடைக்காரர்கள் எம்மை தமது கடை முன் நிற்க வேண்டாம் என்று கலைத்தனர். அப்போது அம்புலன்ஸ் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டி ருந்தது.

சிறிது நேரத்தில் மாமா வந்து அவருடன் புறப்பட்டோம். அம்மா ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவின் உயிரற்ற உடலைப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அப்பா அணிந்திருந்த கழுத்துச் சங்கிலி, இரண்டு மோதிரம், பணப்பை, கைபேசி இவ்வளவும் களவு போய் விட்டதென்று...........

கடைசியில் அப்பா நினைவுக்கு அவரது பொருட்கள் கூட இல்லையே என்ற கவலையுடன் நானும் தங்கையும் காவல் துறையில் ஒரு entry போட்டோம்.

எமக்கு உதவுவதாக எம்முடன் ஓட்டோவில் ஏறிய நபர்தான் அவற்றை திருடியிருக்க வேண்டும் என்று புரிந்தது. பொலிசார் அப்பாவை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஓட்டுனரைப் பிடித்து விசாரித்ததில், கூட வந்தவர் ஆஸ்பத்திரி போகும் வழியில் ஓரிடத்தில் இறங்கி விட்டதாக சொன்னார்.

நேற்று பொலிசாரிடம் இருந்து வந்த செய்தியில் ஒரு சிறிய நல்ல தகவல். திருடன் இறங்கிய இடத்திலிருந்த CCTV camera மூலம் பிடிபட்டுவிட்டான், திருட்டை ஒத்துக்கொண்டான் என்பதே.

அந்த மகள் aunty, aunty என்று சொன்ன உண்மை நிகழ்வு என் மனதை தாக்கியதால் உங்களுடன் பகிர நினைத்தேன்.

பதிவு: Arunthathy Gunaseelan

இதையும் தவறாமல் படிங்க