ஸ்ரீலங்கா பௌத்தநாடே அல்ல! -மீளவும் உறுதிப்படுத்தினார் அமைச்சர் மங்கள!

406shares

ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறியுள்ளார்.

மீண்டுமொரு கறுப்புஜுலை இனக் கலவரத்தையும், மோதல்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிதி அமைச்சர் மங்கள, இந்த முயற்சிகளை முறியடித்துக்காட்டுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடி யது. இதற்கமைய நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா என்பது பௌத்த நாடே அல்ல என்று அறிவித்தார்.

ஏற்கனவே மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும்,ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இந்த எதிர்ப்புக்களை மீறி இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் தனது நிலைப்பாட்டை அமைச்சர் மங்கள் சமரவீர மீண்டும் முன்வைத்தார்.

“சர்வதேச தீவிரவாதத்தை நாம் தற்போது கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இந்த நாட்டிலுள்ள வங்குரோத்து நிலை யை அடைந்திருக்கும் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயற்சிக்கி ன்றனர். இம்முறை சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும், முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரையை குத்துவதற்கும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லிம் மக்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அவர்கள் வழங்கிய தகவ லின் அடிப்படையிலேயே தீவிரவாதிகளை முடக்கினோம். எனினும் மஹாசோன் படையணி போன்றன இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மினுவாங்கொடையில் இனவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த பலரும் சிங்களவர்கள்.

முஸ்லிம் மக்களின் வர்த்தகங்களினால் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருவாய் வருடாந்தம் கிடைக்கிறது. சிலோன் டீ ஏற்றுமதி செய்யும் நிறுவனம்கூட முஸ்லிம்களுடையது. அதேபோல ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார,மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் முஸ்லிம் வர்த்தக முயற்சிகளுக்கான விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல.

ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் நாடாகும் என்று நான் கூறுகையில் தூஷண வார்த்தைகளால் என்னைத் திட்டித் தீர்க்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இந்த நாடு ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குரியது.

புத்த பெருமானால் போதிக்கப்பட்ட பௌத்தம் என்பது ஒரு மார்க்கமே தவிர அது மதமாகாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள சமரவீர,அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முஸ்லீம் மக்களுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார்.

பௌத்த மதம் என்று கூறினால் அது தவறாகும். பௌத்த மார்க்கம் என்று சொல்வதே சரியானதாகும். பௌத்த தர்மம் என்பது மதமல்ல. புத்த பெருமான் வழங்கிய இந்த தர்மமானது இனத்துக்கு, மதத்துக்கு வரையறுக்கப்பட்டதல்ல. அதனால் பௌத்தர்கள் என்று கூறுவதற்கு நாம் வெட்கமடைய வேண்டும். ஏனென்றால் சில பௌத்த பிக்குமார்கள் இந்த புனிதமான பௌத்த தர்மத்தை விற்பனை செய்கின்றனர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் எமது பௌத்த தர்மத்திலுள்ள விடயங்கள்தான் உள்ளன.

எனவே நீங்கள் கொண்டுவருகின்ற இந்தப் பிரேரணையானது ரிஸாட் பதியுதீனுக்கு விரோதமானதல்ல மாறாக முஸ்லிம் மக்களுக்கு விரோதமானதாகும். முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்திலிருந்து பிரிக்கவே பார்க்கின்றனர்.யார் எவ்வகையான கனவுகளைக் கண்டாலும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று சவால் விடுக்கின்றேன்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்த உரைக்கு மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச பலதடவை குறுக்கீடு செய்தார்.இருப்பினும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய கீர்த்தி அபேவிக்ரமவின் மைத்துனரான விமல் வீரவன்ச, அவருடைய மரபணு உறவுமுறையின் உந்துதலே இந்தக் குறுக்கீடுகளுக்கு காரணம் என கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விமல் வீரவன்சவின் குறுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!