சிறிலங்காவே எஞ்சியிருக்காது: பாரிய புரட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றேன்! ஞானசாரர் எச்சரிக்கை

490shares

ஐ.எஸ் தீவிரவாத மற்றும் அடிப்படைவாதிகளிடம் இருந்து ஸ்ரீலங்காவை மீட்டுக்கொள்வதற்கான மிகப்பெரிய புரட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக பொது மன்னிப்பின்கீழ் விடுதலையாகியுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பொதுபல சேனா அமைப்பானது தலைமைத்துவத்தை வகிக்கவும் தயாராகியிருப்பதாகத் தெரிவித்த ஞானசார தேரர், தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்காவிட்டால் ஸ்ரீலங்கா நாடானது எஞ்சியிருக்காது என்றும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்து அடிப்படைவாத ஆயுததாரிகள் குறித்து முன்னரே எச்சரிக்கையை முன்வைத்துவந்த பொதுபல சேனா, ஞானசார தேரரின் விடுதலைக்கான கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்து வந்தது.

இதனையடுத்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் 9 மாதங்கள் மற்றும் 15 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்டிருக்கும் ஞானசார தேரர், அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஸ்ரீலங்கா நாட்டை மீட்டெடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் மிகப்பெரிய சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கான தலைமைத்துவத்தை பொதுபல சேனா அமைப்பு வகிப்பதற்குத் தயார் என்று கூறிய அவர், ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றாவிட்டால் முற்றாக ஸ்ரீலங்கா நாடு அழிந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் பிரேமதாஸ, கோணவல சுனில் என்பவருக்கு பொதுமன்னிப்பு அளித்தார். அவர் யார்? மோசடியாளர், துஷ்பிரயோகம் செய்தவர், வன்முறைகளில் ஈடுபட்டவர்.

அவர் பெண்களை துஷ்பிரயோகம் செய்து சிறை தண்டனை பெற்றபோது அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. வரலாற்றுடன் ஒப்பிட்டு தற்போது பொதுபல சேனா பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை பாருங்கள். ஞானசார தேரரை விடுதலை செய்ததை விமர்சிக்கின்ற தரப்பினர் சற்று வரலாற்றைப் பார்க்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எத்தனையோ இருக்கின்றன.

சில அரசியல்வாதிகள் மீதும் காணப்படுகின்றன. எனினும் நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிப்பதோடு அவர் செய்த குற்றத்திற்கு சில மாதங்கள் தண்டனை அனுபவிக்க நேரிட்டது. ஞானசார தேரரை அரசியலில் சேர்த்துக்கொள்ள சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முய்றசிக்கின்றது என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. புத்தபெருமானும் அதேபோல இயேசு கிறிஸ்துவும் மன்னிப்பளிக்கவே கூறியிருக்கின்றார்கள். ஆகவே ஞானசார தேரரின் விடுதலையை நான் பாராட்டுகின்றேன்” என ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க