சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு உள்ள தொடர்பு என்ன? இன்றைய தெரிவுக்குழு அமர்வில் வெளிவந்த பரகசியம்!

353shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷீம் மற்றும் அவர் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்தினர் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொலிஸாருடன் இணைந்தே செயற்பட்டிருப்பதாக மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கி ன்றார்.

உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகி சாட்சியமளித்த அசாத் சாலி, அவருடன் அண்மையில் பதவி விலகிய கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு கடந்த2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் நிபந்தனைகளுடனான ஆதரவை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

‘அளுத்கம சம்பவம் இடம்பெற்றபோது அமைச்சர் ராஜிதவுக்கு தெரியப்படுத்தியதோடு அளுத்கம பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திடமும் முறையிட்டிருந்தோம். இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அளுத்கமவில் இடம்பெற்றால் நிச்சயமாக தீ மூட்டுவார்கள். அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ச - கோட்டாபய ராஜபக்ச - பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பொறுப்புகூற வேண்டும் என்பதை முறைப்பாட்டில் கூறியிருந்தேன். அதனால் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் கோரியிருந்தேன். பின்னரே சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. யார் இதனை செய்தார்கள் என்பதை புதிய அரசாங்கம் ஆணைக்குழு வொன்றை அமைப்பதாக கூறிய போதிலும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுவே ஆரம்பம். எங்கே சென்று தாக்கினாலும் யாரும் கேட்பதற்கு இல்லை. பொலிஸாரும் இல்லை என்று புரிந்துகொண்டனர். இந்த தாக்கு தல்களில் தூள் வகை ஒன்றை கொண்டுவந்து எறிந்து தீ வைத்தார்கள் என்றுதான் கூறியுள்ளனர். இதுவே அளுத்கமவில் இடம்பெற்றது. ஏன் இதனை ஆராயமுடியவில்லை என்ற கேள்வி உள்ளது. பின்னர் திகனவுக்கு வந்து காலிக்குச் சென்று மினுவங்கொடைக்கு சென்றது.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் பகிரங்கமாக அறிவித்திருந்தாக அசாத் சாலி கூறினார்.

இதன்போது அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அளவுக்கு மொஹமட் சஹ்ரானுக்கு அதிகாரங்கள் எங்கிருந்து கிடைத்தன என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அசாத் சாலியிடம் வினவினர்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹ்ரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் அவர்களை வைத்திருந்ததாக அசாத் சாலி கூறினார்.

தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டதாக அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.

மொஹமட் சஹ்ரான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அசாத் சாலி, அதனால் சஹ்ரானின் பேச்சுக்களுக்கு அந்த பகுதி மக்கள் செவி மடுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனாலேயே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக மொஹமட் சஹ்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் காணப்படும் விடயங்கள் என்னவென இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தமது தேர்தல் பிரசாரங்களின் போது பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்ப கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் சஹ்ரானுக்கும், அவரது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் எதிராக முஸ்லிம் மக்களே முறைப்பாடுகளை செய்தும், அவற்றை கவனத்தில் எடுக்காத ஸ்ரீலங்கா பொலிஸார், தீவிரவாதி சஹ்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் நண்பர்களாகவே இணைந்து செயற்பட்டிருந்ததாகவும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றஞ்சாட்டினார்.

ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர் எனது பாதுகாப்பு பிரிவு எனக்கு எச்சரிக்கை கடிதத்தை காண்பித்தபோது இவர் குறித்து நாம் தெரியப்படுத்தினோம்தானே. கடந்த வாரமும் சந்தித்து கூறினோமே என்றேன். பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம் கூறியபோது அவர் சம்பவத்துக்கு முதல்வாரம் அதிகாரிகளை அழைத்து பேசினார். அதில் சிசிர மெண்டிஸ் உள்ளிட்டவர்கள் இருந்தனர். ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிலந்தவிடம் ஐந்து வருடங்களுக்கு முன்னரே இதுபற்றி புகைப்படங்களுடன் தெரிவித்திருந்தேன். அதனைவிடவும் 2017ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் பாரம்பரிய முஸ்லிம் மக்களின் 120 வீடுகளை சஹ்ரான் தீயிட்டுக் கொளுத்தியிருந்தார். அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் விசாரிக்கவில்லை. மக்கள் வீதியில் இறங்கி சஹ்ரானை கைது செய்வதற்கான ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள். அவரைக் கைது செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

2005ஆம் ஆண்டு முதல் பொலிஸாரும் தவ்ஹீத் ஜமாத்தும் இணைந்தே செயற்பட்டுள்ளனர். முஸ்லிம் இனத்தவர் ஒருவர் அவர்களுக்கு எதிராக பொலிஸாரிடத்தில் முறையிடச் சென்றபோது காத்தான்குடி பொலிஸார் அவரை துரத்தினர். சஹ்ரானை சுதந்திரமாக நடமாட அனுமதித்தனர். இன்னுமோர் உதாரணத்தைக் கூறுகிறேன். மட்டக்களப்புக்கு ஜனாதிபதியுடன் நான் அண்மையில் சென்றபோது எனது பின்னே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இருந்தார். சிலோன் தவ்ஹீத் ஜமாத்திடமிருந்து பிரிந்துசென்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் பாரம்பரிய முஸ்லிம்கள் வாழ்கின்ற மல்வானையில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி போதனைகளை செய்கிறார்கள் என்றும் அங்கு பிரச்சினை ஏற்படலாம் எனவும் அவருக்கு எச்சரித்தேன். அவர் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தொலைபேசி ஊடாக கேட்டபோது ஜும்மா தொழுகைகளை அவர்கள் செய்கிறார்கள் என்றும் அதனை தடுக்க முடியாது எனவும் பதிலளித்தார். ஜும்மா போதனைகளை 40 பேருக்கு கீழே இருந்தால் செய்ய முடியாது என்பது சட்டம்

இதேவேளை மட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு சவுதி ஊடாக நிதியுதவி கிடைத்ததையும் தான் அறிவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறினார்.

இந்த பல்கலைக்கழகம் முழுமையான ஷரியா கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது என கூறிய அவர், அந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறி மாத்திரமே ஷரியா எனவும் கூறினார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டம் காணப்படுகின்ற பின்னணியில், முஸ்லிம்களுக்காக ஷரியா சட்டம் அத்தியாவசியமானதா? என தெரிவுக்குழு உறுப்பினர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அசாத் சாலி, முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமாக ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது என கூறினார்.

பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியா சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தில் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலோன் தெஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் அசாத் சாலி தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ராசிக் குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று தடவைகள் கூறியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதை தான் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்துல் ராசிக் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி வருவதாக கூறிய அவர் அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நான் ஆளுநராக இருந்த காலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தொடர்பிலான விடயங்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று முறை தெரிவித்திருந்ததாகவும் இன்றைய சாட்சியமளிப்பின்போது அசாத் சாலி குறிப்பிட்டார்.

நான் ஊடக சந்திப்புக்களிலும், பாதுகாப்பு செயலாளரிடமும் சொல்ல வேண்டிய அத்தனை தரப்பினரிடமும் தெரிவித்திருந்தேன். அதேபோல ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் கூறியிருந்தேன். இறுதியாக பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து காணொளிகளை முன்வைத்தும் கூறினோம். தாக்குதலுக்கு முன்னதாக தவ்ஹீத் ஜமாத்தின் 08 பேரது பெயர்கள் தொடர்பான எச்சரிக்கை கடிதம் எனக்கு கிடைத்தவுடன் பொலிஸ்மா அதிபர் பூஜித்தவுக்கு தொலைபேசி ஊடாக பேசினேன். நாங்கள் கலந்துரையாடிய நபர்கள் இப்போது எச்சரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஏன் இவர்களைக் கைது செய்ய முடியவில்லை என்று வினவியபோது அவர் பதிலளிக்கவில்லை”.

இதையும் தவறாமல் படிங்க