சிறிலங்காவில் வாராந்தம் நடைபெற்றுவரும் அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை!

11shares

சிறிலங்காவிற்கு அனைத்துத் துறைகளிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு சிறிலங்கா ஜனாதிபதியின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்றைய தினமும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காவில் 250-க்கும் மேற்பட்ட உயிர்களை காவுஎடுத்த ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த பாதுகாப்பு கட்டமைப்பின் தலைமை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன.

குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் வழங்கிய சாட்சிகளில் பெரும்பாலானவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிப்பதாகவே அமைந்திருந்தன.

இதனையடுத்து மே மாதம் ஏழாம் திகதியான கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டியிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பில் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

அதேவேளை தன்னை இலக்கு வைத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்தும் செயற்படுமானால் அமைச்சரவைக் கூட்டங்களிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதியின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்றைய தினம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயே இன்று முற்பகல் நடைபெறவேண்டிய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாது இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.

எனினும் இதுவரை அமைச்சரவைக் கூட்டம் இரத்துச்செய்யப்பட்டதற்கான காரணம் ஜனாதிபதி தரப்பாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பாலும் தெரிவிக்கப்படவில்லை

எனினும் நேற்றைய தினம் இரவு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழமையாக நடைபெறும் அமைச்சரவை பூர்வாங்கக் கூட்டம் வழமைபோல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முக்கியமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் கடந்தவாரம் ஜனாதிபதி தெரியப்படுத்தியிருந்த கடும் எதிர்ப்பு தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரைக் குறிப்பிட விரும்பாத முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின் இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டிருந்தார் என்றும் ஆனால் ஜனாதிபதி பிரதரை சந்திக்க விரும்பாததால் சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச்செய்யப்பட்டதாகவும் குறித்த தலைவர் கூறினார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் முற்பகல் இடம்பெறவேண்டிய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாத நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு அமைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூடியுள்ளது.

இதன்போது மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் உட்பட பிரதிநிதிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க