முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்டிருப்பதற்கான காரணம் இதுதான்!

73shares

முஸ்லிம் மக்களின் பொருளாதார ரீதியான வளர்ச்சியை பாரிய சவாலாக ஸ்ரீலங்காவின் சிங்கள – பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் கருதியதாலேயே, அவர்களை அடக்குவதற்காக முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்தகாலங்களிலும் இதே நோக்கத்திற்காகவே இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்திருக்கும் அவர், அதன் தொடர்ச்சியாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம்களை இலக்க வைத்து இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களால் தமிழ் பாதிக்கப்படும் அதே அளவிற்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் தமிழ் மக்களுக்கு இல்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தையை வெளிப்படையாக காட்டிக் கொடுத்துவரும் தமிழ் தலைமைகளின் பின்னால் செல்லாது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கு கடந்தவார இறுதியில் விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்தாத கூட்டமைப்பு , தமிழ் தரப்பு முற்றாக நிராகரித்திருக்கும் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலேயே வலியுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க