தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் இயற்கை வளங்கள்! அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர்!

71shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் ஓரமாக தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்களத்தினுடைய அனுமதியுடன் அரசமரக் கூட்டுத்தாபனத்தினால் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இவ்வாறு தேக்கு மரச் சோலைகள் அழிக்கப்படடுவதால் அந்த இடங்கள் வெட்டை வெளியாக காணப்படுகின்றன.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 வீதமான வனப்பகுதி இருப்பதாகவும் இதனை பாதுகாக்குமாறும் மக்கள் மத்தியில் பெருமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த மரங்களுக்கான தேவை இல்லாதபோதும் தொடர்ச்சியாக இவ்வாறு தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அரசமர கூட்டுத்தாபன வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு தொடர்ச்சியாக வெளிமாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வு, மணல் அகழ்வு, கருங்கல் அகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் அவதானித்து வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட திணைக்களம் எதற்காக தொடர்ச்சியாக மரங்களை அழித்து வருகிறது என்பது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு குறித்த பகுதியில் இன்றைய தினம் மரம் அறுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியில் நடைபெறுகின்ற செயற்பாட்டை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அரசமர கூட்டுத்தாபன அதிகாரிகள், எதற்காக இதை படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதோடு ஊடகவியலாளரை தங்களுடைய கைத்தொலைபேசியில் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கிறார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த இடத்தில் சிங்கள மொழியிலே ஒரு பதாகையை போட்டுவிட்டு அதிலேயே விடயங்கள் அனைத்தும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றார். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியிலே சிங்கள மொழியிலேயே ஒரு பதாகையை போட்டுவிட்டு தங்களுடைய இந்த பணியை செய்து கொண்டிருக்கின்ற அரசமர கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடானது இதில் ஏதாவது சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறான தேவைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லாத நிலையில் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்காக உழைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

மாவட்டத்தில் தேவையில்லாத போது மரங்கள் அறுக்கப்படுவது ஒருபுறமாக இடம்பெற ஏன் பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து மரநடுகை செய்ய வேண்டும் இவ்வாறு மரங்கள் அறுப்பதை தடுக்கலாம் என மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க