பணப்பைக் கொள்ளையர்களாக அரசாங்கம்! ஏலத்தில் விடப்பட்டுள்ள நாடு!

66shares

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டை வெளிநாடுகளுக்கு ஏலத்திற்கு விட்டிருப்பதுபோல் அமைந்திருப்பதாக சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களை ஒன்றினைத்து செயற்படும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைமை பௌத்த பிக்குவான எல்லே குணவங்ச தேரர் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் உட்பட நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்திலுள்ள தலைவர்கள் தங்களது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இராப்பகலாக முயற்சித்து வருவதாகவும் எல்லே குணவங்ச தேரர் விமர்சித்துள்ளார்.

யுத்துகம என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், நாட்டையும், நாட்டு மக்களையும் ஆட்சியாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய துர்பாக்கிய நிலமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எல்லே குணவங்ச தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உலகில் எந்தவொரு நாட்டிலும் மக்கள் எதிர்கொள்ளாத சம்பவங்கள் இடம்பெற்ற நாடு என்ற நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டையும் மக்களையும் அரசாங்கத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும். எந்தவொரு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்கமே இன்று எமக்கு இருக்கிறது.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுதராத அரசாங்கமே தற்போது உள்ளது. ஆட்சியிலுள்ளவர்களின் பிரச்சினைகள் மற்றும் மோதல்களை மட்டுமே எம்மால் இன்று கேட்கமுடிகிறது. இன்று பிரதமர் மீது ஜனாதிபதியும், ஜனாதிபதி மீது பிரதமரும் ஏட்டிக்குப் போட்டியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக இன்றைய அரசியல் தலைவர்கள் இராப்பகல் பாராமல் உழைக்கின்றனர். மக்கள் தங்களது துக்கங்களை சொல்லித் தீர்ப்பதற்கான அரசியல்வாதிகள் இந்த அரசாங்கத்திற்குள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாட்டில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க முடியாது என்றும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை அடுத்து இந்த நாடு இன்னமும் ஆதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

மக்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஜே.ஆர்.ஜயவர்தனவின் கூற்றையே இந்த அரசாங்கமும் வழங்கியுள்ளது. நாட்டினுள் எப்போதும் நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தி சர்வதேச ஒப்பந்தங்களை செய்ய அரசாங்கம் முனைகிறது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் துறைமுகத்தின் தென்முனைப் பகுதி இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பைக் கொள்ளையர் போல அரசாங்கம் செயற்படுகிறது. இன்று எமது நாடு ஏலத்திற்கு விடப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏமாற்றமடைய எம்மால் முடியாது. மிகவும் உன்னிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கின்றோம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாரில்லை என்றுதான் தெரிகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாட்டை பாதுகாத்துக்கொடுக்க வேண்டும். வாடகைக்கு இந்த நாட்டில் இருப்போரைப் போல் அல்லாமல் நாட்டை நிர்வகிக்கின்றவர்களாக அரசாங்கம் செயற்படுவது அவசியம். மக்களும் அதேபோலவே செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க