'அம்மா... இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்' தர்சினியின் தாயார் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்!

  • Shan
  • June 17, 2019
1788shares

பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்க்கமுடியாத துயர நிலையிலேயே தனது மகள், தன்னுடைய இரு பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக செல்லையா ரீட்டா எனும் பெண் மரணவிசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இளம் தாய் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்தமை தெரிந்ததே. கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஜெனட் தர்சினி ராமையா எனும் பெண் தனது இரு மகன்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலையினை மேற்கொண்டார்.

இவர்களது மரண விசாரணையின்போதே தர்சினியின் தாயாரான செல்லையா ரீட்டா மேற்படி கூறியுள்ளார்.

கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரியான இரேஷா தேஷானி முன்னிலையில் நடந்த இந்த மரண விசாரணையின்போது வாக்குமூலமளித்த ரீட்டா, தனது மூத்த மகளான பரமானந்த மாவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய ஜெனட் தர்சினி ராமையாவும், அவரது இரண்டு பிள்ளைகளான பிரேம்நாத் நோயல் (வயது 8), பிரேம் நாத் டியோன் க்ரிஷ் (வயது5) ஆகியோரே மரணமடைந்ததாக உறுதிப்படுத்தினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

“எனது மகள் தனது மூத்த பிள்ளையான நோயல் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது அவரது கணவருடன் வெளிநாடு சென்றிருந்தார். அங்கு வீசா பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தனது பிள்ளைகளுடன் வீடு திரும்பவேண்டியநிலை ஏற்பட்டு மீண்டும் இங்கு வந்து தங்கினார்.

பின்னர் பிள்ளைகளுக்கு பாடசாலை தேடியும் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் ஆங்கிலம் கற்றதனால் சாதாரண பாடசாலைகளில் சேர்க்கமுடியவில்லை. அதனால் சர்வதேச பாடசாலைகளிலும் முயற்சித்தோம், முடியவில்லை. ஏனெனில் அங்கு பெருமளவு பணம் கேட்டார்கள். மகள் கவலையில் இருந்தாள். நான் பணம் தருவதாக கூறினேன். இதன்படி கடந்த 13ஆம் திகதி நாங்கள் பாடசாலை ஒன்றுக்கு சென்றோம். அங்கு பணம் கேட்டார்கள். அவ்வளவு பணம் எம்மிடம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

மறுநாள் காலையில், “அம்மா நாங்கள் தேவாலயம் சென்றுவிட்டு வருகிறோம். இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்” என்று கூறிவிட்டுச் சென்றாள். எனது பேரன்மார் மிகவும் கீழ்ப்படிவான பிள்ளைகள். அவர்களுக்கு பாடசாலை கிடைக்கவில்லை என்ற கவலையிலேயே மகள் இப்படி செய்திருக்கிறாள்” என்று ரீட்டா கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.

இதையும் தவறாமல் படிங்க