முஸ்லிம்களை கல்லெறிந்து தாக்குங்கள் -பௌத்த தலைமைப்பீடம் உபதேசம்

455shares

சிங்கள பௌத்த மக்களையே தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும் சிறிலங்காவில் வாழும் சிங்கள பௌத்த மக்களின் பிரதான மதத் தலைமை பீடத்தின் மகாநாயக்கர், முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதத்தை தூண்டும் வகையில் பகிரங்கமாக உபதேசமும் செய்திருக்கின்றார்.

முஸ்லிம்களின் வியாபாரங்கள் பகிஸ்கரிக்குமாறு சிங்கள பௌத்த மக்களை வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ள அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட சிறி புத்தரக்கித்த தேரர், முஸ்லிம் சமூகம் சிங்கள பௌத்த மக்கள் தொடர்பில் விருப்பம் கொண்டவர்கள் அல்ல என்று தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தலைமையில் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட சிறி புத்தரக்கித்த தேரர்உரையாற்றியிருந்தார்.

“நாம் பகிரங்கமாக பேச வேண்டும். இந்த நாட்டிற்கு பாதுகாப்பு மிக மிக அவசியம். சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும். பௌத்தர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவைதான் எமது குறிக்கோள். பெத்த பிக்குகளான நாம் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கவே அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதனையே அனைத்து இடங்களிலும் பேசியும் வருகின்றோம். இதுவரை நாம் மௌனமாகவும் இருக்கவில்லை. எம்மை சந்திக்க வரும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இதனையே கூறி வந்திருக்கின்றோம். பிரபல்யத்திற்காக நாம் கதைப்பதில்லை. தற்போதைய நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம். நாடு இன்று அழிவை சந்தித்தத்திற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியே. இதனை அண்மையில் என்னை சந்திக்க வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவரிடத்திலும் நேரடியாக குறிப்பிட்டேன்.

முஸ்லிம் மக்கள் எம்மை விரும்பவில்லை. அதனால் முஸ்லிம் கடைகளுக்கு போகவேண்டாம் என்று நானும் கூறுகின்றேன். அந்தக் கடைகளில் சாப்பிடாதீர்கள். எதனையும் வாங்கிக் குடிக்காதீர்கள். ஏனெனில் எமது சமூகத்திற்கு விசத்தை கொடுத்து அழிக்க முயற்சித்தவர்கள் அவர்கள். இது அனைவரும் அறிந்த விடயம். அதனால் பௌத்த மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் முஸ்லிம் கடைகளுக்கு போகவேண்டாம். முஸ்லிம் கடைகளில் உணவுகளை வாங்கி உண்ட எமது இளைய சமூகத்திற்கு எதிர்கால சந்ததியொன்று இருக்காது என்று நான் நினைக்கின்றேன்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை பார்க்கும் போது இந்த நாட்டின் சந்ததியினரின் எதிர்காலம் நாசமாகிவிட்டது. மருத்துவர் ஒருவர் செய்த வீரதீர செயலை அனைவரும் அறிவர். லட்சக் கணக்கான எமது குழந்தைகளை அழித்துவிட்டார். இவ்வாறான தேசத் துரோகிகளுக்கு வாழ இடமளிக்கக்கூடாது. எனது விகாரைக்கு வரும் அம்மாமார்கள் மருத்துவரை கற்களால் அடித்து கொல்ல வேண்டும் என்கின்றனர். நான் அவ்வாறு சொல்லவில்லை. எனினும் அதுதான் நடக்க வேண்டும். இவ்வாறான குற்றங்களை எமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் செய்திருந்தால் வெட்டி கூறு போட்டிருப்போம். இந்த இடத்தில் சட்ட திட்டங்களில் எந்தவித பிரயோசனமும் இல்லை. பௌத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு முன்னர் செயற்படடது போல், கட்சி, நிறங்களை மறந்து தகுதியானவர்களை தெரிவுசெய்து ஆட்சியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரக்காகொட சிறி புத்தரக்கித்த தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை சீரழித்துள்ளதாக குற்றம்சாட்டியதுடன், இதனை பகிரங்கமாக கூறுவதில் தனக்கு எந்தவொரு பயமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கட்சியின் சார்பில் அவரது மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு தனது ஆதரவை வெளியிட்ட அஸ்கிரிய மகாநாயக்கர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தா ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உள்ளிட்டவரக்ளும் அவர்களது கட்சியிலிருந்து விலகி, சமல் ராஜபக்சவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் உபதேசம் வழங்கினார்.

இதையும் தவறாமல் படிங்க