சஹ்ரானின் அடிப்படை மதவாதம் குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை!

27shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷீம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத்தினர் ஏனைய மதத்தினருக்கு எதிராக 2013 ஆம் ஆண்டில் இருந்தே மிக கொடூரமான அடிப்படை மதவாத தீவிரவாதத்தை பரப்பிவந்ததாக காத்தான்குடியில் வாழும் சுபி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான மொஹமது செயிலான் மௌலவி தெரிவித்திருக்கின்றார்.

சஹ்ரான் மற்றும் அவரது குழுவினரின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆதாரங்களுடன் சிறிலங்காவின் அரச தலைவர் உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கிற்கு பொறுப்பான அனைத்துத் தரப்பினரிடமும் முறைப்பாடுகளை செய்தும் அவை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகிய நிலையில் மொஹமது செயிலான் மௌலவி குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்ட ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷீம் மற்றும் அவரது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சமூகமாக சுபி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மொஹமது செயிலான் மௌலவி நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் நேற்றைய தினம் முன்னிலையாகியிருந்தார்.

எவ்வாறெனினும் பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பதில் கிடைக்கப்பெற்ற விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016 ஆம் ஆண்டு நத்தார் தினத்தை கொண்டாடக் கூடாது என வலியுறுத்தும் வகையில் சஹ்ரான் உரையொன்றை ஆற்றியிருந்ததோடு அந்த காணொளி அடங்கிய இறுவட்டுக்களை கிறிஸ்தவ மக்களிடமே நேரடியாக கையளித்திருந்ததாகவும் மௌலவி தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்புல்லா கலாசார நிலையத்தில் உரையாற்றிய சஹ்ரான், முஸ்லிம் அல்லாத மக்களை படுகொலை செய்ய வேண்டுமென பகிரங்கமாக உரையாற்றியதாகவும் மொஹமது செயிலான் மௌலவி தெரிவித்தார்.

தேசப்பற்று என்பது இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரானது எனவும், தாய்நாட்டை நேசிப்பவன் முஸ்லிம்கள் அல்லவெனவும் சஹ்ரான் பிரசாரம் செய்துவந்ததாகவும் செயிலான மௌலவி குறிப்பிடுகின்றார்.

காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்ற களவரத்தின்போது தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் மொஹமது செயிலான் தெரிவித்தார்.

சஹ்ரான் மாத்திரமன்றி சுபி முஸ்லிம்கள் தொடர்பில் தவறான கருத்துக்களை அவரது நண்பரும் சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட நியாஸஷும் வெளியிட்டுள்ளதாகவும் மொஹமது செயிலான் குறிப்பிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜமய்துல் உலமா சபை, இஸ்லாமிய சமயத்தில் இருந்து மதம் மாறினால் இஸ்லாமிய சட்டப்படி அவர் கொலை செய்யப்பட வேண்டுமென சுபி முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பொன்றினை வழங்கியதாகவும் அதனையே சஹ்ரானும்இ தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட்டதாகவும் செயிலான் மௌலவி குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க