ஒரு இனத்துக்கு எதிரான போராட்டமல்ல!

149shares

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தை நடாத்திவருவதாகவும் இப்போராட்டம் ஒரு இனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல எனவும் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவரும் கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

தமது போராட்டத்தினை யாரும் திசைதிருப்பவேண்டாம் எனவும் இதன்போது அவர் கோரிக்கைவிடுத்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் நான்காவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருமளவான மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களும் இளைஞர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட நா்ாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.

இதேநேரம் தாம் மேற்கொண்டுவரும் போராட்டமானது தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் நன்மை கருதியே மேற்கொண்டுவருவதாகவும் கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

இலங்கையர் என்ற அடிப்படையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்கள் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் உரிமைகளைபெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

30வருடத்துக்கு மேலாக கல்முனை மக்கள் பல்வேறு போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ளபோதிலும் அவை புறந்தள்ளப்பட்டே வந்ததாகவும் தேரர் இங்கு தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க