தெரிவுக்குழு மீது மீண்டும் பாய்கிறது மகிந்த அணி!

51shares

சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்வது பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி மீண்டும் குற்றம்சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்காவில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு பிரதானிகளையும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களையும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றது.

பாதுகாப்பு தரப்பினரை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்வதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அனுமதியின்றி பாதுகாப்பு தரப்பினரை அழைத்து கலந்துரையாட சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு வருகின்றது.

பொலிஸ் மா அதிபர் ஒருவரை அழைத்து கலந்துரையாடியமைக்காக முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் அப்போதைய ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

'1983 ஆம் ஆண்டு சபநாயகராக செயற்பட்ட பாக்கீர் மாக்கார் பொலிஸ் மா அதிபரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பேசினார். அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் சபாநாயகரை வீட்டுக்கு செல்லுமாறு கூறும் நிலை அப்போதைய ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு அமைச்சரான தன்னுடைய அனுமதி இன்றி பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து கலந்துரையாட முடியாது என்று சபாநாயகருக்கு ஜனாதிபதி மிகத் தெளிவாக கூறியிருந்தார். இது வரலாற்று உண்மையாகும். வரலாற்றை வாசித்து பாருங்கள். அண்மையில் இடம்பெற்ற பாரிய துன்பநிலைக்கு பின்னர் அது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபடும் புலனாய்வு அதிகாரிகளை அழைத்துவந்து நடத்தும் கலந்துரையாடலானது அதனைவிட பயங்கரமானது. இந்த விடயத்தை புரிந்துகொள்ளுமாறு சபாநாயகர் கருஜயசூரியவரிடம் கேட்டுக்கொள்வதுடன் சபாநாயகருக்கான அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்து ஒன்றிணைந்த எதிரணியினரான நாங்கள் நாடாளுமன்றில் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு அவர் உரிய பதில் வழங்கவில்லை. இந்த விடயமானது பாரதூரமான ஒன்று என்பதை இன்றும் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றேன்'.

சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்த தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் காரணமாக நாட்டுக்கும் மக்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

'அரசாங்கத்துக்குள் உள்ள முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முஸ்ஸிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். அரசமைப்பு முரண்பாடொன்று காணப்படுகின்றது. இவ்வாறான நிலை காரணமாக நாட்டின் நிலையான தன்மை வீழ்ச்சியடைவதுடன் சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா மீது காணப்பட்ட நம்பிக்கை நாள்தோறும் இல்லாமல் போயுள்ளது. இந்த அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் காரணமாக நாட்டுக்கும் மக்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாரதூரமான பாதிப்பாக நோக்க வேண்டும். 30 அமைச்சர்கள், 40 உப அமைச்சர்கள் ஆட்சி புரிவதாக கூறினாலும் அரசை நடத்திச்செல்ல முடியாத நிலையொன்றே ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான முழுமையான குறைநிரப்பு பிரேரணையை முன்வைத்து நேற்றைய தினமே அதில் குறைகள் உள்ளதாக தெரிவித்து வாபஸ் பெற்றனர். அதில் என்ன உள்ளது என்பது தெரியாத அரசாங்கமான நாடாளுமன்றில் இந்த அரசாங்கம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க