மீண்டும் ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! எச்சரிக்கை கடிதங்களை அனுப்பிய றோ!

499shares

ஸ்ரீலங்காவிற்கும், இந்தியாவிற்கும் தொடர்ந்தும் ஐ.எஸ் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உளவுப்பிரிவான றோ இதுகுறித்த 03 எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு அனுப்பிவைத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தி செயற்பட்டுவந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பிரதேசங்கள் முற்றாக இல்லாது போயுள்ள நிலையில் அந்த அமைப்பு இந்து சமுத்திர நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவிக்கின்றது.

இதற்கமைய இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கு றோ உளவுத்துறை அனுப்பிவைத்திருக்கும் எச்சரிக்கை கடிதங்களில் இந்தியாவில் தாக்குதல்கள் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான தகவல்களையும் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

கேளராவிலிருந்து சுமார் 100 பேர்வரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் கடந்த குறுகிய காலப்பகுதிக்குள் இணைந்திருப்பதாகவும், 30க்கும் அதிகமான நபர்கள் வெவ்வேறு அமைப்புக்களுடன் கேரளா பகுதியில் தொடர்பு வைத்திருப்பதாகவும் றோ கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் கடல் எல்லைப் பகுதிகளிலும், அதேபோல பல இடங்களிலும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இதேவேளை இந்த எச்சரிக்கை குறித்து ஸ்ரீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, றோ உளவுப் பிரிவின் இந்த எச்சரிக்கை குறித்து தங்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை என்று பதிலளித்தார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சுற்றிவளைப்புக்கள், சோதனைகள், கைதுகள் உள்ளிட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும் இதுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை மேலும் பலர் உள்ளூர் பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியல்களிலும் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க