கல்முனையில் அப்படி என்னதான் பிரச்சனை?

143shares

இலங்கைத் ''திரு'' நாட்டில் 25 மாவட்ட செயலகங்களும் அதன் கீழ் தற்போது வரை 331 பிரதேச செயலகங்களும் உள்ளன. (இதில் அண்மையில் அமைச்சரவையில் புதிதாக பெயர் குறிப்பிடப்பட்ட பிரதேச செயலக எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை)

இதில் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான. தலா 04 பிரதேச செயலகங்களும், குருநாகல் மாவட்டத்தில் அதிகமாக 30 பிரதேச செயலகங்களும் உள்ளன.

இதில் ஒரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் 14 பிரதேச செயலகங்களில் ஒன்றுதான் கல்முனை தமிழ் பிரதேச செயலகம்.

கல்முனையானது, அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. 2004ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது பலமாக பாதிக்கப்பட்ட ஓரு பிரதேசமாகும்.

கல்முனையில் குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக, மாநகரசபை, தளவட்டுவான், பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை (இந்த சவளக்கடையில்தான் 01.08.1990 ஆண்டு முஸ்லீம் ஊர்காவல் படையினரால் தமிழர்கள் மீது படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது), மணல்சேனை போன்ற பிரதேசங்கள் அதிக மக்கள் பரம்பலை கொண்டவை

கல்முனையின் எல்லைகளாக கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரிய நீலாவணையையும் தெற்கே காரைதீவையும் மேற்கே களப்பின் கடல் நீரேரியையும் குறிப்பிடலாம்.

கல்முனையில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.

இங்கு மூன்று பிரதேச செயலகங்கள் இருக்கின்றன

அவையாவன:

கல்முனை பிரதேச செயகலகம் (முஸ்லீம்) (15 கிராம சேவகர் பிரிவுகள் )

கல்முனை பிரதேச செயகலகம் (தமிழ்) (29 கிராம சேவகர் பிரிவுகள் )

சாய்ந்தமருது பிரதேச செயகலகம் (17 கிராம சேவகர் பிரிவுகள் ) என்பனவகும்

இதில் கல்முனை பிரதேச செயலகம் (முஸ்லீம்) மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பவற்றில் வாழும் மக்களில் 90 வீதமானவர்கள் முஸ்லீம் மக்களும், கல்முனை பிரதேச செயலகம் (தமிழ்) இல் வாழும் மக்களில் 90 வீதமான மக்கள் தமிழர்களாகவுமே இருக்கின்றனர்.

வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தை, தன் அரசியல் பலத்தால் தோற்றுவித்தவரும், செங்கலடியை சேர்ந்தவருமான அப்போதைய சாணக்கியராக கருத்தப்பட்ட, கலாநிதி க.வி வேதநாயகம், 1977 ஆம் ஆண்டு ஜெ,ஆர் ஜெயவர்த்தனாவின் அரசில், நிதி அமைச்சராகவும் பின்னர், 1980 ல் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த போது உருவாக்கப்பட்டதே இந்த கல்முனை பிரதேச செயலகம் (தமிழ்).

அந்த உருவாக்க காலத்தில், அனைத்து பிரதேச செயலகங்களும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களாகவே காணப்பட்டன. அவற்றிடம், பணம் கொடுக்கல் வாங்கல்கள், ஓய்வூதியம், இறப்பு - பிறப்பு பதிவு, மோட்டார் வாகன பதிவு, அரச காணி உரித்து போன்றன இருக்காமல், அவை மாவட்ட செயலகத்தில் மட்டுமே இருந்தன. மக்களும் அதன் தேவைகளுக்கு மாவட்ட செயலகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது .

காலப்போக்கில், மேற்சொன்ன விடயங்களை உள்வாங்கி பிரதேச மட்டத்தில் அவற்றை கொடுக்கும் விதமாக, 1993ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்களாக தர உயர்வு பெற்றன. இந்த காலத்தில் தான் மாகாணசபைகளிடம் இருந்த காணி அதிகாரங்களில் முக்கியமானவை பிரதேச செயலருக்கு பாரப்படுத்தப்பட்டன. முதலில் ஓய்வூதியம், மோட்டார் வாகன பதிவு, அரச காணி உரித்து, பணம் கொடுக்கல் வாங்கல்கள் என்பன பாரப்படுத்தப்பட்டதுடன் காலப்போக்கில் இறப்பு - பிறப்பு பதிவு போன்றன பாரப்படுத்தப்படடன.

குறித்த 1993ம் ஆண்டு பிரதேச செயலக தர உயர்வின் போது சாதாரணமாகவே தரமுயர வேண்டிய கல்முனை தமிழ் பிரதேச செயலகம் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடும் எதிர்ப்பினால் தரமுயர்த்தப்படாமல் இன்றுவரை மக்களுக்கு தேவையான விடயங்களை செய்ய முடியாத ஒரு பிரதேச செயலகமாகவே காணப்படுகின்றது.

சாதாரணமாக கிடைக்க வேண்டிய ஒரு உரிமையை கிடைக்கவிடாமல் செய்வதற்கு ஒரு இனத்தரப்பால் முடிகின்றபோது, இதுவரை அங்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தரப்பும் அது சார்ந்த கட்சிகளும் கூட வாய் மூடி இருப்பது ஒரு இனத்துக்கு செய்யும் கேவலமான துரோகமாகும்.

வவுனியாவில் சிங்கள மக்களுக்கு என ஒரு பிரதேச செயலகம் முழு பிரதேச செயலக அதிகாரத்துடன் இயங்கமுடியும் எனில், அந்த சனத்தொகையைவிட அதிகமான மக்களை கொண்ட கல்முனையில், முழு அதிகாரத்துடன் தமிழ் பிரதேச செயலகம் முழு தர உயர்வுடன் இருக்க தடை ஏற்படுத்தப்படுகின்றது??? என்பதை நேயர்களாக்கிய உங்களிடம் விட்டு விடுகின்றோம்.

அறிக்கைகளில் குறிப்பிடப்படும் சகோதரத்துவம் எங்கே இருக்கின்றது???

- காத்தமுத்தர் -