இலங்கையை உலுக்கிய இளம் குடும்பத்தின் சாவு; ஊரே பெரும் சோகத்தில்...!

  • Shan
  • June 23, 2019
2005shares

ஹம்பாந்தோட்டை மாவட்டம் கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸமாராம கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக தந்தையுடன் மகள் ஒருவரும் கடலில் பலியான நிலையில் மற்றொரு மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாயாரான அசினி விஜேசூரிய, தெபரவவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல் தீவிர நிலையின் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்த்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

குறித்த குடும்பம் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் சாக்குவிடுதி வீதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் சுற்றுலாப் பயணமாக யால தேசிய வனத்திற்குச் சென்ற நிலையில் கிரிந்த கடலுக்கும் சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அசினி ஹட்டன் பகுதியிலுள்ள சம்பத் வங்கியில் பணிபுரிந்துவந்த நிலையில் வங்கி ஊழியர்களுடன் அசினி குடும்பமும் யால தேசிய வனத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளது. பின்னர் கிரிந்த பகுதிக்குச் சென்றவர்கள் இன்று காலை ஏழு மணியளவில் கடலில் குளித்துள்ளனர்.

இதன்போது பெரிய அலையொன்று அவர்களை உள்ளிழுத்துச் சென்றதாகவும் இதனால் அவர்கள் நீரில் மூழ்கி பலியானதாகவும் கூறப்படுகிறது.

குறித்த கடற் பகுதி பாரிய பாறைகளைக் கொண்டுள்ளதுடன் கடும் அலைகளையும் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பலியானவர்கள் 42 வயதுடைய ருவான் விஜேசூரிய, எட்டு வயதுடைய சாகலா விஜேசூரிய, நான்கரை வயதுடைய நதிஷா விஜேசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தென்னிலங்கைக் கடல்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களை கடற்கரைகளுக்குச் செல்லவேண்டாமென்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க