உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

  • Jesi
  • July 10, 2019
18shares

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 99 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலுடன் நேரடியாக மற்றும் மறைமுகத் தொடர்புகளை வைத்திருந்த 160 பேர் தடுப்புக் காவலிலும், 168 சந்தேக நபர்கள் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பின்னர் கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் இனவாத கும்பலினால் பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களின் இல்லங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலை அடுத்து பலர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் கூடியது.

சபையில் பிரதான பணிகளுக்கு முன்னதாக பிரதமரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னர் அதன் எதிரொலியாக இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை 99 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பதிலளித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 160 சந்தேக நபர்கள் தடுப்புக் காவலிலும், 168 சந்தேக நபர்கள் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இந்த தாக்குதல்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருப்பது தொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இந்த தாக்குதல்கள் குறித்து மேலும் 99 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் முடிந்த பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைப்பெற்று அதன்பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். குளியாப்பிட்டிய மற்றும் ஹெட்டிபொல பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் குறித்து இதுவரை 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நீதிமன்றங்களில் அறிக்கையிடப்பட்டு மேலதிக விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வன்முறைகளுக்கு உத்தரவு மற்றும் அனுசரணை வழங்கியவர்கள் குறித்து விசாரணை இடம்பெறுவதோடு குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதும் நிச்சயமாகும்”.

குளியாப்பிட்டி மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முஸ்லிம்களின் இல்லங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இதுவரை கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும், அவற்றுக்கான நட்டஈடுகள் எப்போது வழங்கப்படும் என்றும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த வருடம் கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று இந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கம் நட்டஈட்டை வழங்காமற்போகுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு விட்டதாகவும், அதன் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காருக்கு வழங்குவதாகவும் சபையில் தெரிவித்தார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் எதிரொலியாக இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஒரு பிரிவுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்பட்டுவிட்டதாகவும் மிகுதியான பள்ளிவாசல்களுக்கும் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க