ரிஷாட்டின் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்து சம்பளம்! பல்வேறு ஊழல் மோசடி பதிவானது முறைப்பாடு!

54shares

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத் கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளனர்.

முறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தாவது,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமாக நாடளாவிய ரீதியில் 42 நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றான சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுகின்றன.

அத்தோடு ரிஷாட்டுக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனத்திற் கூடாகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி ரிஷாட்டுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான ஆதரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. அந்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளோம்.

ரிஷாட் பதியுதீன் மாத்திரமல்ல. தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பிலும் வெகு விரைவில் வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க