சுபி முஸ்லிம்களை தாக்கிய சஹ்ரான் குழு மீது ஏன் சட்டம் பாயவில்லை?

20shares

காத்தான்குடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுபி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சஹ்ரான் குழுவினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது சிங்கள ராவண பலய அமைப்பு.

இது தொடர்பாக சட்டமா அதிபருக்கு சிங்கள ராவண பலய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் நேற்றையதினம் கடிதமொன்றை கையளித்ததாக தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் சுபி முஸ்லிம்களை தாக்கிய சஹ்ரான் குழுவினர் அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுமிருந்தனர்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிறிய மீன்கள் தொடர்பாகவே விசாரணை நடத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன் காத்தான்குடி பொலிஸ் அதிகாரி அளித்த தனது சாட்சியத்தில், ஜூன் 07, 2017 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக 300 பக்க அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.

எனவே இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தகுந்த நடவடிக்கை எடுத்து சஹ்ரானையும் அவரது குழுவையும் கைது செய்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டு 250 க்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சஹ்ரான் ஹாஷிமுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 14 நாட்களுக்குள் பதில் அனுப்பப்படும் என்று சட்டமாஅதிபர் அவருக்கு அறிவித்ததாகவும் தேரர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிய மீன்களுக்கே தண்டனை விதிக்கப்படுகின்றன, பாதுகாப்பு செயலாளரையும் பொலிஸ் மா அதிபரையும் மட்டும் கைது செய்வது போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு மேலே உள்ளவர்களும் தங்கள் கடமைகளைச் செய்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க