யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிய இளைஞன்! மனு ஒன்றை தாக்கல் செய்த தாயார்

140shares

பருத்தித்துறை - மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடமே இழப்பீடு கோரி உயிரிழந்த இளைஞனின் தாயாரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி பருத்தித்துறை மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்தார்.

துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அபுதாலிப் மொகமட் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணை வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட யோகராசா தினேஷின் தாயாரான யோகராசா செல்வம், தனது மகனின் சாவுக்குக் காரணமானவர்கள் என பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் குறிப்பிட்டு அவர்களிடமிருந்து ரூபா 50 லட்சத்தை இழப்பீடாகப் பெற்றுத் தருமாறு கோரி பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க