முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளை ஆட்சியிலிருந்து விலககோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

40shares

தீர்மானமிக்க முடிவுகளை எடுக்க இயலாத அரசியல் தலைவர்கள், ஆட்சியிலிருந்து விலகி பொறுப்பு வாய்ந்தவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இருந்தும் கைது செய்ய முடியாமல் போனமைக்கு முதுகெலும்பில்லாத அரசியல் தலைவர்கள் இருப்பதே காரணம் எனவும் அவர் சாடியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

தூய்மைப்படுத்தும் ஆராதனை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன் பின்னர் மறைபாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்து.

இந்த நிகழ்வில், அமைச்சர் சஜித் பிரேமதாச, கத்தோலிக்க மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர், பிரதேசவாசிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தற்கொலை குண்டு தாக்குதலின் போது கட்டுவபிட்டிய தேவாலயத்தில் 115 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைந்தனர்.

இலங்கை ராணுவத்தினர் தேவாலயத்தின் புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருப்பலியின் பின்னர் கருத்து தெரிவித்த கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டிய பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, குற்றவாளிகளை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இருந்தும் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய முடியாமல் போனமைக்கு முதுகெலும்பில்லாத அரசியல் தலைவர்கள் இருப்பதே காரணம் எனவும் சாடியுள்ளார்.

வழி தவறிய இளைஞர்களை பிடித்துக் கொண்டு சர்வதேச நாடுகள் சில தமது நோக்கை அடைய செய்த சதியின் விளைவே தாக்குதல்.வெளிநாட்டு சக்திகள் இங்கு தலைதூக்க இடமளிக்க முடியாது. நாட்டின் புலனாய்வுத்துறையை அந்த சக்திகளின் சொல்கேட்டே அரசு முடக்கியது. – என்றார் பேராயர்.

இதையும் தவறாமல் படிங்க