மானிப்பாய் இணுவில் இணைப்பு வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாகவே இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்று கொலின்குழு எனப்படும் மற்றொரு குழுவின் தலைவன் மீது தாக்குதல் நடத்தவே இணுவில் பகுதிக்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் அறுவர் வருகை தந்துள்ளனர் என இதுவரையிலான விசாரணைகளிலிருந்து அறியக் கிடைப்பதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து தப்பியோடிய ஐந்து ஆவா குழு உறுப்பினர்களில் இருவரை நேற்றுமாலை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இந்தவகையில் அடையாளம் காணப்பட்டோரை கைது செய்யவும் ஏனையோரை அடையாளம் காண்பதற்காகவும் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதிக்குள் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் இரவு இணுவில் பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கமைய முன்கூட்டியே பிரதேசத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைப்படி கோப்பாய்,மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் இரவுநேர விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறு விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸார் வீதிகளில் வந்த வாகனங்களை வழிமறித்து வாகனங்களை சோதனை செய்தனர்.அவ்வாறே இணுவில் இணைப்பு வீதியிலும் பொலிஸ் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.இதன்போது ஒரேநேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வருவதை அவதானித்த பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சமிக்ஞை காண்பித்துள்ளனர்.ஆனால் அதனை பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் பொலிஸார் தமது தற்பாதுகாப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள்மீது துப்பாக்கிசூட்டை மேற்கொண்டனர்.இதன்போது என்.பி பீ.எப்.ஏ 4929 என்ற இலக்கத்தையுடைய மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.
இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதி விழுந்துள்ளது.அத்துடன் துப்பாக்கிசூடு பட்ட இளைஞனும் படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து 22 வயதுடைய கொடிகாமம் பகுதியைச்சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் அந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.எனினும் அங்கு சிக்சி்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மேலதிகமாக 2 வாள்கள், இரண்டு கூரிய ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடும் போலியானது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறிந்துள்ள பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற ஆவாகுழு உறுப்பினருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணப்பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குடாநாட்டில் மீள தலைதூக்கும் ஆவாகுழுவை ஒடுக்கவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மானிப்பாய்,கோப்பாய்,மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.