பௌத்த சிங்கள நாட்டை நோக்கி வெற்றிகரமாக நகரும் சிறிலங்கா!

87shares

இந்தக் கட்டுரை கிருபாகரன் என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்தெழுந்த ஞாயிறு முதல் இன்று வரை இலங்கைதீவில் நடப்பவை யாவும் - ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானம் 30/1ஐ நடைமுறைப்படுத்தாதது சிறிலங்கா உலகிற்கு சாட்டு போக்கு சொல்வதற்கு போதுமானததாக அமைகிறது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஏற்படவிருந்த தாக்குதல்களைப் பற்றி ஏற்கனவே சிறிலங்கா முழுமையாக அறிந்திருந்த போதிலும், அரசாங்கம் எந்த முன் நடவடிக்கையும் எடுக்கமால் இருந்ததிற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது.

ஊடகங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் பிரகாரம், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களும் இருப்பவர்களும், இந்த தாக்குதல்களை நடத்திய குழு மற்றும் அதன் உறுப்பினர்களை நன்கு அறிந்து தெரிந்துள்ளார்கள் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விடயம். இவ்விடயம் இன்றுவரை சரியான முறையில் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. உயிர்தெழுந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலின் மூல காரணிகளை, வெளிநாட்டு உளவுத்துறைகள் கண்டறிந்துள்ளதாக அறிகிறோம்.

அவர்களது கண்டுபிடிப்புக்கள் யாவும் அனைவரையும் வியக்க வைப்பவை. எது எவ்வாறாயினும், சிறிலங்கா உண்மைகள் யாதார்தங்களை மூடி வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்பதை பொது அறிவு படைத்தவர்களால் நிட்சயம் உணர முடியும்.

குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களின் எச்சரிக்கைகள் குறித்து, அரசாங்கம் ஏன் கவலைப்படவில்லை என்று ஒருவர் வினாவினால் - பதில் மிகவும் எளிதானவை. சிங்கள பௌத்தர்களிற்கு எதிராக எதுவும் இல்லாத வரை, சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவ் தாக்குதல்கள் பற்றி ஒருபொழுதும் அக்கறை கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.

சிறிலங்காவின் ஒவ்வொரு ஆட்சியாளரும் பௌத்த சிங்களவளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பது மிக நீண்ட கால உண்மை.

சர்வதேச சமூகத்தை, சிறிலங்கா எவ்வளவு காலம் முட்டாளாக்க முடியும்? 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்கள் – சில நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக நட்பாக வாழ்ந்துவந்துள்ள தமிழ் மக்களையும் மற்றும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களிடையே, பிளவுகள் பிரிவுகள் குபேரங்களை ஏற்படுத்தும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஒற்றுமையாக வாழ விடாது ‘பிரித்து ஆளும்’ முறையை கையாளுகின்றனர். இதில் உண்மைகளை அறிய முடியாது, சுவாதியீனம் கொண்ட சில தமிழ் முஸ்லீம்கள், சிங்கள பௌத்த ஆட்சியாளரின் சூழ்சிக்கு ஆளாகியுள்ளனர்.

1980ன் முற்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகிய வேளையில் - சிறிலங்கா அரசாங்கத்தின் முதல் நடவடிக்கை என்னவெனில், நூற்றாண்டுகளாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த தமிழர்கள் மற்றும் பல முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியமையாகும்.

இவ் திட்டத்தின் அடிப்படையில், கிழக்கில் முஸ்லிம்களை உள்ளடக்கிய ‘ஊர் காவற்படையினரென’ அழைக்கப்படும் ஒரு புதிய படையை சிறிலங்கா உருவாக்கியதுடன், அவர்களிற்கு ஆயுதங்களும் வழங்கி - கிழக்கில் மற்றும் வடக்கு வாழ் தமிழர்களுக்கு விரோதமாக இவ் ஊர்காவற் படை இயங்க ஊக்குவித்தனர். இந்த முயற்சி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியையும் பகைமையையும் உருவாக்கியது.

யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள்

அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் உண்மை வெளிவருவதற்கு காலம் எடுக்கும் என்ற தத்துவத்தை நாம் ஒரு பொழுதும் மறக்க முடியாது. சமீபத்தில் கிடைத்த தகவலின் பிரகாரம், இவ் நடவடிக்கையை, அவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளியாகிய விளங்கிய கோபாலசாமி மகேந்திரராஜா அல்லது ‘மாத்தயா’ என்பவரினால் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதன் ஆணி வேர் எங்குள்ளது என அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, அதை அங்கீகரித்திருந்தது எனவும் கூறப்பட்டது. சுருக்கமாக கூறுவதனால், ஒரு வலுவான சக்தியுடனான தொடர்புகளுடன், வெளிநாட்டில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியால் திரைக்குப் பின்னால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக அவமானத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் பின்னணியிலே இச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இவ் உண்மையை தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை காலம் கடத்தியே உணர்ந்து கொண்டார்களாம். இவற்றின் சூத்திரகாரிகள் யார் என்பதை, வாசகர்கள் அறிய வேண்டுமானால், தமது சொந்த பகுப்பாய்வை செய்ய வேண்டும்!

இருப்பினும், 1995 முதல் யாழ்ப்பாணம் முழுமையாக இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால், சிறிலங்கா அரசு, உண்மையில் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் அனுதாபம் கொண்டிருந்தால், 1995 முதல் ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேற்றவில்லை? உண்மை என்னவெனில், புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் முஸ்லிம்களை, சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலை புலிகளிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினர் என்பதே உண்மை. இது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எரியும் கோபத்திற்கு மேலும் பெற்றோல் ஊற்றப்பட்டது.

இதேவேளை முஸ்லீம் காவற்படையினரையும், தீவிர முஸ்லிம்களையும் கிழக்கில் வாழும் தமிழர்களின் சொத்துக்களான – நிலம், நெல் வயல்கள், மீன்பிடித் தொழில், கடைகள், பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றை அழிக்கவும், பறிமுதல் செய்யவும் சிறிலங்கா அரசு ஊக்குவித்தது. இந்த சம்பவங்கள் குறித்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட புகார்களை சிறிலங்கா அரசுகள் அலட்சியம் செய்தனர்.

சிறிலங்கா அரசு, மேலும்முஸ்லிம் இளைஞர்களை தங்கள் உளவுத்துறையில் சேர்த்ததுடன், சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கும் விசாரிப்பதற்கும் அவர்களைப் பயன்படுத்தியது. சுருக்கமாக கூறுவதனால், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு மேலாக, தமிழர்களின் குரலை அடக்குவதற்கு குறுகிய தந்திரமான முறைகளை, குறிப்பாக முஸ்லிம்களைப் பயன்படுத்தி நசுக் ஆரம்பித்தனர் என்பதே உண்மை.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிறிலய்காவின் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த பிரதமர், ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்து, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அதிகார மோகம் கொண்ட ஒருவரை பிரதமராக நியமித்தார். இறுதியில், தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான ஆதரவுடன் சர்ச்சைகள் தீர்க்கப்பட்டது.

இவ் நாடாளுமன்ற குழப்பம் தீர்க்கப்பட்டவுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, அதாவது தமிழ் மக்களை பழிவாங்குவதற்காக, ஜனாதிபதி சிறிசேன, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, மிக தீவிர முஸ்லீமை நியமித்தார். ஆளுநராக நியமிக்கப்பட்ட நபர், கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தங்களாக பயமுறுத்தி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வேடிக்கை என்னவெனில், அவ் நபர், உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய குழுவின் தீவிர ஆதரவாளர் என பலராலும் வர்ணிக்கப்படுவதை நாம் இன்று காண்கிறோம். கிழக்கில் முன்னாள் ஆளுநராக பணிபுரிந்தவரின் பின்னணியை அறிந்து கொள்வதற்கு இவ் யூடியூப்பைக் கேளுங்கள். https://thinakkathir.com/?p=62308

ஜனாதிபதியின் குழப்பம்

இது மட்டுமல்லாது கிழக்கின் ஒவ்வொரு அரசாங்க உயர் பதவியும், ஜனாதிபதி சிறிசேனாவினால் விசமத்தனமாக திட்டமிட்டு, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையே சர்ச்சைகள் பிரச்சனைகளை ஏற்படுத்துவதே அவருடைய முக்கிய நோக்கமாகும்.

தமிழ் மக்களை பழிவங்கும் நோக்குடன் தகமையற்ற ஒருவரை, கிழக்கின் ஆளுநராக நியமித்து தலைகுனிந்து நிற்கும் புத்திசாலித்தனமற்ற ஜனாதிபதி, தற்பொழுது கிழக்கின் முன்னாள் ஆளுநரை என்ன செய்வதென அறியாது திகைத்து நிற்கிறார். உண்மையை கூறுவதனால், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லீமை ஆளுநராக நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. வடக்கிற்கு ஓர் கல்விமானை ஆளுநராக நியமித்தது போல், ஒரு முஸ்லீம் கல்வியாளரை கிழக்கிற்கான ஆளுநராக நியமித்திருக்க முடியும். விசேடமாக தமிழர்களை விரோதியாக பார்க்கும் ஒருவரை நியமிப்பது என்பது ஜனதிபதியின் சிறுபிள்ளை தனம் என்பதே உண்மை.

உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, சிறிலங்கா இராணுவம் மிகவும் அசிங்கமான அவநம்பிக்கையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இவை நிச்சயம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடன் தான் நடைபெறுகிறது என்பதில் ஐயமில்லை. இன மோதலுக்கு சமாதானமான அரசியல் தீர்வுகளையோ அல்லது மத அடிப்படையிலான எதிர்கால தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்காது – சிறிலங்காவின் பாதுகாப்பு படையினர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களை, முதளை கண்ணீருடன் அணுகி, அவர்களை புகழ்வதுடன் மன்னிப்பும் கோரி, தங்களுடன் இணைந்து, தங்களிற்கு உதவி செய்யுமாறு கோருவது, ‘ஒரே கல்லால் இரண்டு பறவைகளை’ பெறும் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. இது உண்மையில் தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களை காலப் போக்கில் பாதாள குழியில் தள்ளும்.

சிறிலங்கா அரசோ பாதுகாப்பு படையினர் உண்மையில், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் அனுதாபம் கருணை இருக்குமானால் - கடந்த காலத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களை மன்னித்தது போல், சிறையில் இருக்கும் அனைத்து விடுதலைப் புலிகளையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். மேலும், இராணுவத்தில் சரணடைந்து ‘காணாமல் போனவர்கள்’ எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களையும் வழங்க வேண்டும். இவற்றை தவிர்த்து, சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த நபரின் புதிய புதிய கபட ஆலோசனைகளிற்கு தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களை பலிகடவாக்க முடியாது. இவ் நபரே, தமிழீழ விடுதலை புலி இயக்கத்திலிருந்து, கருணாவையும் கே.பியையும் கபடமாக கையாண்டு பிரித்தவர் என்பதை நன்கு அறிவோம்.

‘தொலையியக்கி’ அதிசயங்களை செய்யுமா?

சிறிலங்கா ஆட்சியாளர்கள், தாம் தமிழர்களை வெற்றிகரமாக முட்டாளாக்கிவிட்டதாகவும், தற்பொழுது சர்வதேசத்தை முட்டாளாக்குவதகாவும் எண்ணுகிறார்கள். இச் சிந்தனை செயற்திட்டம் நீண்ட காலத்திற்கு வேலை செய்யப்போவதில்லை. இவர்கள் தங்களை தாங்களே முட்டாளாக்கிறார்கள் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள்.

மிக அண்மையில், கருணா என்ற மசவாசுப் பெயர்வழியின் தலைமையில், கிழக்கு மற்றும் பிற இடங்களில் முஸ்லீம் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு ஒரு பிரிவு, சிறிலங்காவினால் உருவாக்ப்பட்டுள்ளதாக அறிகிறோம்!

இப்போது விடயத்திற்கு வருகிறேன். சமீப காலங்களில், உள்ளூர் ஊடகங்களில் பல வதந்திகள் உண்மை செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், ஒரு முக்கிய செய்தி யாவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. அதாவது, “உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள், உள்ளூர் குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், இவ் தாக்குதலிற்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்வுமில்லையென”, விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட விரும்பாது ஊடகங்களிற்கு செய்தி கொடுத்துள்ளார். அப்படியானால், சராசரி அறிவை கொண்ட ஒருவர், முதலில் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில், அப்படியானால், “இந்த உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின் உள்ளூர் சூத்திரகாரி யார்”?

நியூசிலாந்தின் தாக்குதலிற்கும், இலங்கையில் உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது .

இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு அமைய - ‘தாக்குதல் நடத்தியவர்கள் நன்கு படித்த, நல்ல குடும்பங்களை சார்ந்த, சுயாதீனமாக பணம் படைத்தவர்கள்.

அடுத்து, குற்றம் சாட்டபட்டுள்ள அவ் தீவிர இஸ்லாமியக் குழுவின் முக்கிய தலைவராக நம்பப்படுகிறவர், தானாக இவ் தாக்குதலை மேற்கொள்ளவதற்கு முன்வந்தரா என்பதை எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், உலக நியதிக்கு அமைய, ஒரு அமைப்பின் தலைவர் ஏதோ ஒரு விதத்தில் இல்லாது போனால், அவர் வளர்த்த அல்லது தலைமை தாங்கிய குழு அறவே அழிந்து போகும் என்பதே உண்மை.

இந்த குழுவின் தலைவர், உண்மையில் உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதாக நம்பப்பட்டால், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்ற கேள்வி இங்கு எழுகிறது. ‘தொலையியக்கியினால்’ அதிசயங்களைச் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்?

உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல் நடத்திய ஒன்பது (9) நபரும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊதியத்தில் இருந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் முன்னைய தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள். இவ் சந்தர்ப்பத்தில் ஒரு பொது மனிதர்களினால் என்ன முடிவை எடுக்க முடியும்?

உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து, தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரினால் வழங்கப்பட்ட செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்யும் யாவரும், தாக்குதல்கள் குறித்து இலங்கை உளவுத்துறை ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவார்கள்.

பயங்கரவாதம் குறித்த போலி நிபுணர்

உயிர்தெழுந்த ஞாயிறு பற்றிய உண்மைகளை மூடி மறைப்பதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரவாதம் குறித்த போலி நிபுணர் ஒருவரை, சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இவ் போலி ‘நிபுணர்’ கற்பனை கதைகளை கூறும் அதேவேளை, நடந்த உண்மைகளை மூடி மறைத்து, சிங்கள பௌத்த அரசுகளின் - சிங்களமயம், பௌத்த மயம், இராணுவமயம் மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகிய நான்கு திட்டங்களையும் (தூண்களை) ஒழுங்காக முன்னேற வழி வகுக்கின்றார்.

மேலும், தெற்கின் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மிக அண்மைகால அறிக்கைகளை நாம் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம், முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை எவ்வளவு தூரம் தவறாக வழிநடத்தியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது, தமிழர்களின் உதவியுடன், தமது நான்கு தூண்களை வெற்றிபெற செய்வதில் கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

-ச. வி. கிருபாகரன்-

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!