மன்னார் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து; ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் அதிரடி உத்தரவு!

  • Jesi
  • August 10, 2019
95shares

வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால் விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலாகும் வகையில் ரத்து செய்யுமாறு ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான விளையாட்டு வாய்ப்புக்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட லீக்கின் செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் நடத்தப்படும் வடக்கு கிழக்கு பிறியர் லீக் தொடரில் விளையாடும் வீரர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் விதிக்கப்பட்ட தடை மற்றும் அபராதம் தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார் மாவட்ட லீக்கினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு முரணானது எனவும் ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனமும் ஏனைய லீக்குகளும் பல்வேறு மட்டத்தில் விளையாடும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்புக்களை உருவாக்கி கொடுப்பதுடன் அதனை ஊக்குவிக்க வேண்டும் எனவும் இந்த விடயத்தில் மன்னார் மாவட்ட லீக் இணங்கும் என நம்புவதாகவும் ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கால்பந்தாட்ட துறையின் மேம்பாட்டை கருத்திற் கொண்டே எந்தவொரு போட்டிகளுக்கான அனுமதியையும் தாம் வழங்குவதாக ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் தொடர்பான ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அதற்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக கூறியுள்ள ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம், எவ்வாறாயினும் எந்தவொரு வகையிலும் வீரர்களுக்கு தடை விதிப்பதோ அவர்களை பலியாடாக்குவதோ கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் சீசன் 2 க்கான அனுமதியை ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு வழங்கியுள்ளதாகவும் அதனை ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளன பேரவை கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி அங்கீகரித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அங்கீகாரம் வழங்கப்படும் போது மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர் பி.ஞானராஜ்யும் பிரசன்னமாகியிருந்தார் என்பதனையும் ஸ்ரீலங்கா கால்பந்தாட்ட சம்மேளனம் நினைவு படுத்தியுள்ளது.

தமது லீக்கின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீறி செயற்பட்டார்கள் எனத் தெரிவித்து தேசிய விளையாட்டு வீரரரும் மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் உப தலைவரும் ஒழுக்காற்று குழு உறுப்பினருமான ஜி.டிகோணிங்கிற்கு மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் ஒருவருட தடையை விதித்திருந்தது.

அதனைத் தவிர, மன்னார் ஏப்.சி., மாதோட்டம் ஏப்.சி, மற்றும் தமிழ் யுனைட்டட் அணிகளைச் சேர்ந்த 19 வீரர்களுக்கு ஒரு வருட தடையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பதாக மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க