கோட்டாவுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசும்!

24shares

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெற்றால், தான் அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியவரும் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் தேர்தலில் கோட்டாபயவை ஆதரிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார் என்பது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவரை சந்தித்த பின்னரே தெரிய வந்தது. இல்லாவிடின்,தெரியவர வாய்ப்பு இல்லை.

எல்லாருடனும் கலந்துரையாடுவதே தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு. அனைவருடனும் கலந்துரையாடிய பின்னர், எமது பேரம் பேசும் நிலைப்பாட்டுக்கு வருவோம். பூர்வாங்கம் தனியாக பேசலாம். ஆனால், கூட்டாகத் தான் பேச முடியும். பட்டறிவின் அடிப்படையில், சிங்கள மக்களுக்கு செய்யப் போவதை சொல்லி, அதனூடாக தமிழ் மக்களுக்கான தீர்வை தரக்கூடிய வகையில் ஒரு பேச்சுவார்த்தைக்கே செல்லவுள்ளோம்.

புதிய அரசியலமைப்பை உருவாக்காது, 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கோட்டாபயவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டா என ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளிக்கையில், தற்போதைய நிலையில், கோட்டாபயவை ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்ற பேச்சுக்கு இடமில்லை. தற்போது கோட்டாபய தான் எனச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி யார் என சொல்லவில்லை. ஜே.வி.பி. யார் என சொல்லவில்லை. ஜே.வி.பியின் கொள்கைகளைப் பார்த்து, ஜே.வி.பியினரும் பேசுவார்கள். அவர்களும் எங்களுடன் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

யார் கூடுதலாக எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களோ, யார் எமது கோரிக்கைகளை ஆதரிப்பார்கள், அந்த ஆதரிப்புக்களை யார் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள். என்ற அனைத்தையும் பரிசீலித்து தான் முடிவுகள் எடுக்கப்படும்.

கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் இருக்கின்றது என்பதெல்லாம் தவறான கருத்து, தெரிவுகள் வெளிப்படையாக உள்ளன. யார் எங்களுடன், ஒத்துழைத்து, எமக்கு யார் வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு சொல்லி, ஒத்துழைப்பு தரக்கூடியவர்களை தான் ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வருவோம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க