தமிழர் தாயகத்தை நெருங்கும் ஆபத்து! அடுத்து நடக்கப்போவது என்ன ?

450shares

இலங்கையில் நீர்வளம் நிறைந்த மாவட்டங்களில் இர‌ண்டாவது இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் போத்தல் நீரை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.


மாவட்டத்தில் மிகக் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பாமர மக்கள் தொடங்கி சுற்றுலா துறையினர் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் மழை பெய்யாவிட்டால் மாவட்டத்தில் குடிநீர் உட்பட அனைத்து நீருக்கும் பெரும் பஞ்சம் ஏற்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை பத்து பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 96 கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்கள் வரட்சி காரணமாக குடிநீரைப் பெறுவதில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

விவசாய செய்கை செய்யப்பட்ட 7723. 5 ஏக்கர் நெல்வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3102 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை பதிவாகியுள்ளது. இதைவிட மேட்டு நிலப் பயிர்ச் செய்கை செய்யப்பட்ட 621. 75 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 229 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைவிட நன்னீர் மீனவர்கள், பண்ணையாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தின் வரட்சியைத் தீர்மானிக்கும் உன்னிச்சைக் குளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரட்சியை காலநிலை மாற்றங்கள் தீர்மானித்தாலும் உன்னிச்சை குளத்தின் நீர் மட்டமே அதில் அதிக தாக்கம் செலுத்துவதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல குளங்கள் இருக்கின்ற போதும் உன்னிச்சை குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை நம்பியே மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் உன்னிச்சை குள குடிநீர் திட்டத்தின் ஊடாக நீரைப் பெரும் நகர் புற மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

உன்னிச்சைக்குளமாது இயற்கையான குளமாக காணப்படுகின்ற போதிலும் அதனை 1907ஆம் ஆண்டு தான் குளமாக கட்டப்பட்டது.

பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தததை தொடர்ந்து அது மீளவும் புனரமைக்கப்பட்டு 58000 ஏக்கர் அடி தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு குளக்கட்டுகள் உயரமாக அமைக்கப்பட்டன.

ஆனால் கடந்த 5 வருடகாலமாக உன்னிச்சை குளத்தில் உள்ள நீர் மட்டம் வரட்சியான காலத்தில் ஆகக் குறைந்தது 15 அடியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு 5 அடிக்கு கீழ் சென்று விட்டது.

ஆபத்தை ஏற்படுத்தும் தவறான நீர் முகாமைத்துவம்!

உன்னிச்சை குளத்து நீரை நம்பி வாழும் நிலையை உருவாக்கி குளத்து நீரை குடிநீராக்கி பொதுமக்களிடம் விற்பனை செய்யும் அரச திணைக்களங்களின் தவறான நீர் முகமைத்துவமும் இந்த நீர் பஞ்சத்திற்கு காரணம்.

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையும், விவசாயிகளுக்கு நீரை வழங்க வேண்டிய நீர்ப்பாசனத் திணைக்களமும் நீர் முகாமைத்துவத்தில் விட்ட பல தவறுகளே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நீர் பஞ்சத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

58000 அடிக்கு மேல் நீரைத் தேக்கிவைக்கக் கூடிய உன்னிச்சை குளத்து நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று வரை சீர் செய்யப்படாது நீர் தேக்கத்தின் நான்கு கதவுகளின் ஊடாகவும் நீர் வெளியேறுவதால் பெருமளவு நீர் வீனாகிறது.

இதை விட உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் இம்முறை அதிகரித்தபோது அதனை படிப்படியாக திறந்து விட வேண்டிய நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் ஒரே தடவையில் பெருமளவிலான நீரைத் திறந்துவிட்டதால் குளத்து நீர் மேலும் வீனாகியதோடு விதைக்கப்பட்ட வயல் நிலங்களும் அழிந்து போயிருந்தன.

இதே போன்று உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு நகர் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி செங்கலடி கல்குடா பகுதிகளுக்கு நீரை வழங்கும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை பணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குடிநீரை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கி வந்ததன் காரணமாக குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நீரை அனைத்து தேவைகளுக்கும் நகர் புறங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தியதனாலும் நீர் பஞ்சம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

2013ஆம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உன்னிச்சை குடிநீர் திட்டத்தை நம்பி நகர் புறங்களில் உள்ள மக்கள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக பாவித்து வந்த கிணறுகளை மூடியுள்ளனர்.

2013 ஆண்டுக்கு பின்னர் உருவாக்கிய குடிநீர் திட்டத்திற்காக பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தை கைவிடுமாறு சொல்வது எந்த வகையில் நியாயம்.

இன்று விவசாயமா? குடிநீரா? என்ற நிலையை நீர்வழங்கள் வடிகாலமைப்பு அதிகார சபை உருவாக்கி உள்ளது.

பணம் தருகிறார்கள் என்பதற்காக எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனைத்து நீர் தேவைகளுக்கு உன்னிச்சை குடிநீரையே காத்தான்குடி ஓட்டமாவடி ஏறாவூர் மட்டக்களப்பு நகர் பகுதி மக்கள் பாவித்து வருகின்றனர் இதுவும் வரட்சி நேரத்தில் நீர் பஞ்சம் ஏற்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.

முகத்துவாரம் வெட்டும் அரசியல் ?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு வீதிகள், வீடுகள் கிணறுகள் வெள்ளத்தால் மூடும் அபாயம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாவட்டத்தின் அனர்த்தங்களை குறைப்பதற்காக வேறு வழியின்றி முகத்துவாரம் வெட்டப்பட்டு வந்தது ஆனால் அண்மைக்காலமாக முகத்துவாரம் வெட்டுவது ஒரு அரசியல் செயல்பாடாக மாறிவிட்டது. ஒரு சிலரது வயல் மூழ்கப்போகிறது என்பதற்காகவும், சில தனிநபர்களது ஹோட்டல் விடுதிகள் மூழ்கப்போகிறது என்பதற்காக அரசியல் வாதிகளின் அழுத்தத்தின் காரணமாக முகத்துவாரம் வெட்டப்படுகிறது என்றால் நம்புவீர்களா?

மட்டக்களப்பில் உள்ள முகத்துவாரத்தை வெட்டுமாறு கல்முனையைச் சேர்ந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பில் வைத்து அரசாங்க அதிபருக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்றால் முகத்துவாரம் வெட்டுவதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பதையும் அதற்காக என்ன விலையும் கொடுக்க பலர் தயாராக உள்ளனர் என்பதை பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு தெரிவதில்லை.

இன்று வரை முகத்துவாரம் வெட்டுவதற்கு பதிலாக அந்த நீரை சேமிப்பதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க முடியவில்லை.

உன்னிச்சை குளம் தவிர்ந்த மாவட்டத்தில் உள்ள ஏனைய குளங்களில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களை புனரமைப்பு செய்து அதில் மழை நீரை சேமிக்க முடியும் ஆனால் அவற்றை எல்லாம் செய்யாது விட்டு விட்டு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு நீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை வெறுமனே இயற்கை மீது மட்டும் பழி சுமத்தி விட்டு அதிகாரிகள் இருக்க முடியாது.

விடுதலைப் புலிகள் உருவாக்கிய உன்னிச்சை குடிநீர் திட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட உன்னிச்சை குளத்து நீரை சுத்தமாக்கி குடிநீர் வழங்கும் திட்டம் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது. குறித்த திட்டத்தின் ஊடாக படுவான்கரைப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு குடிநீரை வழங்க விடுதலைப் புலிகளின் திட்டமிட்டிருந்தனர் இதற்கான நீர்த்தாங்கி உட்பட அனைத்தையும் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் அமைக்கவும் திட்டமிடப்பட்ட போது அதனை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹிஸ்புல்லா அவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் கையில் இந்த குடிநீர் திட்டம் செல்வது ஆபத்தானது என்று கூறி ஹிஸ்புல்லா அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹிஸ்புல்லா உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் ஊடாக காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி பகுதிகளுக்கு குடிநீரை கொண்டு போகவேண்டும் என்று குறியாக இருந்தாரே தவிர படுவான்கரையில் குடிநீருக்கு அவதிபடும் பாமர மக்களை துளியளவும் கணக்கில் எடுக்க வில்லை இதனால் அதனை அவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

யுத்த முடிவுக்கு வந்ததன் பின்னர் ஹிஸ்புல்லா நினைத்ததை அப்படியே செய்தார் அதாவது உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் ஊடாக நகர்புறங்களில் உள்ள மக்களே அதிகளவு குடிநீரைப் பெறுகின்றனர் ஆனால் காலம் காலமாக குடிநீர் இன்றி தவித்து வரும் படுவான்கரை மக்களுக்கு இன்று வரை குடிநீர் வழங்கப்படவில்லை. ஆனால் இன்று ஒட்டு மொத்த மாவட்டமும் நீர் பஞ்சத்தை எதிர் நோக்கி உள்ளது.

இவ்வாறான வரட்சி வரலாற்றில் முதல் தடவை என்று கூறப்பட்டாலும் இலங்கையில் நீர்ப்பரப்பு அதிகமுள்ள மாவட்டம் ஒன்றில் இதனை எதிர் கொள்ள முடியாத திராணியற்ற நிர்வாக திறமையில்லாத திட்டமிடலை சரியாக மேற்கொள்ள முடியாத இன ரீதியாக சிந்திக்கும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கே இந்த நீர் பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்