சஜித்துக்கு தாயாரால் வழங்கப்பட்டுள்ள முக்கிய இரண்டு அறிவுரைகள்! (செய்திப்பார்வை)

16shares

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு செல்ல வேண்டாம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு அவரது தாயார் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வேண்டும் என தாயார் ஆலோசனை வழங்கியுள்ளார். சஜித்தின் முழுமையான அரசியல் பயணத்தை முகாமைத்துவம் செய்யும் நபராக அவரது தாயார் ஹேமா பிரேமதாஸவே செயற்படுகிறார்.

தாயாரினால் தான் ஐக்கிய தேசிய கட்சியில் சஜித்திற்கு உறுப்புரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்புரிமை பெற்ற தினத்தில் சஜித்திற்கு தாயார் இரண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். தனது தந்தை உயிரை பணயம் வைத்து கட்சியை விட்டு ஒரு நாளும் செல்ல கூடாது எனவும், தந்தையை பாதுகாத்த ரணிலை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாவதற்கு மேற்கொள்ளும் போராட்டத்திற்கு முழுமையான ஆசிர்வாதத்தை தாயார் வழங்கியுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி சஜித் தனியாக ஒரு கட்சியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியவுடன் அவரை அழைத்த தாயார் மீண்டும் அதே இரண்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார். கட்சியை விட்டு வெளியேறுவோம் என சஜித்தின் ஆதரவாளர்கள் கூறினாலும், அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் ரணிலுக்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார். அருகில் இருப்பவர்களை நம்ப வேண்டாம் அவர்களிடம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார். தாயின் வார்த்தைகளை மீறி ஒருபோதும் சஜித் செயற்படாதவர் என்பதனை ரணிலும் நன்கு அறிந்தவர் என அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.