விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரனுக்கு கொடுக்கப்படும் பதிலடிகளுக்குள் சிக்கிக்கொண்ட தென்னிந்திய பிரபல தமிழ் நடிகர்!

1986shares

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர்.

மேலும் 2009-இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் தெரிவித்திருந்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இதனையடுத்து முத்தையா முரளிதரனின் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான குறித்த கருத்துக்கு, விடுதலைப்புலிகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? விடுதலைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் நீங்கள் வாழ்ந்தீர்களா? விடுதலைப்புலிகள் எந்த அப்பாவிகளை கொலை செய்தார்கள்? தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறீர்களே சிங்கள அரசின் அற்ப சலுகைகளுக்கு ஆசைப்பட்டா? நீங்கள் உண்மையிலேயே தமிழரா? போன்ற கருத்துக்களை முன்வைத்து உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களுடாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முரளிதரனின் குறித்த கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி.

சில மாதங்களுக்கு முன் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்திருந்திருந்த நிலையில் ஈழத்தமிழருக்கெதிரான கருத்துக்களை முன்வைத்த முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கூடாது என தென்னிந்தியாவில் இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் சார்பான அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் விஜய் சேதுபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

அப்போது இவர்களின் கோரிக்கையை ஏற்று தான் இந்த வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தென்னிந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன, அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் என பலர் விஜய் சேதுபதிக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவிற்கு நிகழ்வொன்றிற்காக சென்ற விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக மீண்டும் அறிவித்திருந்தார், அதற்கான பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அறியமுடிகின்ற நிலையில், முரளிதரன் தற்போது இவ்வாறு சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து தற்போது தமிழர்களால் விஜய் சேதுபதிக்கெதிராகவும் பல விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இனியாவது ஈழத்தமிழர்களின் உணர்வை புரிந்துகொண்டு முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.