ரணிலுடன் இரவில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ; பேசப்பட்டது என்ன? மனம் திறக்கின்றார் சஜித்

139shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாகவும் பேச்சு குறித்த பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாமென அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரிமாளிகையில் கலந்துரையாடல் நிறைவுபெற்ற பின்னர் அலரிமாளிகைக்கு வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணிநேரம் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி, சிறுபான்மை கட்சித் தலைவர்களுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என ரணில் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...