வவுனியாவில் வீடுபுகுந்து அடாவடி! பொலிஸ் அவசர பிரிவினரின் அசமந்த போக்கால் ஏற்பட்ட விளைவு!

25shares

வவுனியா - மதவுவைத்தகுளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் இன்று காலையில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர் இரு தரப்பும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர். பின்னர் தம்முடன் முரண்பட்டவரின் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் சென்ற மூவர் வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் அங்கு ஒன்று திரண்ட அயலவர்களால் இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூவரையும் அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் குறித்த மூன்று இளைஞர்களையும் வீட்டுக்குள் பூட்டி வைத்த பொதுமக்கள் 119 பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள் .

எனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதன் பின்னர் கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி சமரசம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அடாவடியில் ஈடுபட்ட நபர்களிடம் காணப்பட்ட வாள் ஒன்றையும் பொது அமைப்புக்கள் பறிமுதல் செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இனி இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் மூன்று இளைஞர்களும் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...