வவுனியாவில் பொலிஸாரினால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!

35shares

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.

புதிய இலங்கைக்கு சஜித் எனும் தொனிப்பொருளிலான குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர், மன்னார் வீதி, குருமன்காட்டு சந்தி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

இச்சுவரொட்டிகளை நேற்று மாலை வவுனியா பொலிஸார் நடமாடும் பொலிஸாரின் வாகனத்தில் சென்று கிழித்தெறிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாரிடம் வினவிய போது, தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் இருந்து எமக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளன.

இதன் அடிப்படையிலேயே தாம் அந்த சுவரொட்டிகளை அகற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.