மட்டக்களப்பில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் எரிக்கப்பட்டநிலையில் மீட்பு! தலைமறைவானார் தாய்

29shares

மட்டக்களப்பில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசுவொன்று சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் தாய் தலைமறைவாகியுள்ள நிலையில், ஏறாவூர் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு சந்திவெளி -ஜீவபுரம் பகுதியில் தீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் குடும்ப உறவினர்கள் மூவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிறந்த இந்த சிசுவை புதைத்துவிட்டு அதன் மேற்பகுதியில் குப்பை கூழங்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிசுவை நாய் தோண்டி வெளியே எடுத்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

நாற்றம் வீசியதை அடுத்து உயிரிழந்த சிசுவின் சடலத்தை அப்பிரதேச மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிசுவின் தாய் எனச்சந்தேகிக்கப்படும் பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தவேளை இப்பெண் கர்ப்பம் தரித்துள்ளதாக அறியவருகிறது.

சடலத்தை ஏறாவூர் சுற்றுலாநீதிமன்ற நீதிபதி நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.