ரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை; கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதில்!

480shares

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது சிறுபான்மையின சமூகங்கள் தங்களை அழிப்பதற்கு பேரினவாதிகளுக்கு தாங்களே அனுமதிப் பத்திரத்தை வழங்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை அச்சம் பீதியுடன் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும், விரக்தியில் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதும் தங்களுக்கு தாங்களே அநியாயத்தை கட்டவிழ்த்துவிட்டுக்கொள்வதற்கு சமமான காரியம் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் ஒக்டோபர் 13 ஆம் திகதியான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை தேர்தல் காலங்களில் அடக்கி வாசிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச – கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் பணிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகின்றார்.

இதற்கமையவே அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனவாதத்தை பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவின் துணைத் தலைவரான சிங்கள இனவாத பாடகர் மதுமாதவ அரவிந்த கட்சியைவிட்டு விலகிவிட்டதாக நாடகம் காட்டியிருப்பதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நாட்டை பாதுகாப்பதற்கு தயார் என்று அறிவித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சத்தையும் பீதியையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் அச்சமும் பீதியும் காரணமாக சிறுபான்மையின சமூகங்கள் வாக்களிப்பதோ அல்லது வாக்களிக்காது தவிர்ப்பதோ மிக மோசமான நிலமைகளுக்கே இட்டுச்செல்லும் என்றும் ஹக்கீம் எச்சரித்தார்.

இதேவேளை எந்தவொரு காரணத்திற்காகவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்கமாக கோரிக்கையொன்றை விடுத்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு ஒருசில தரப்பினர் கூறி வருவதாகவும் குறிப்பிட்ட ஹக்கீம், இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகமோசமான அநீதி என்றும் சுட்டிக்காட்டினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நவம்பர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தத் தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலும் ஹக்கீம் கடும் ஆத்திரம் வெளியிட்டார்.

குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லீம் சமூகம் முகம்கொடுத்துள்ள மிக மோசமான நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தையும் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் செயற்பாட்டிலேயே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஈடுபட்டுள்ளதாகவும் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்