சோதனை சாவடிகள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதாக கோட்டாபய வாக்குறுதி!

26shares

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிபணிந்து செயற்பட்டுவருவதாலேயே நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விகுறியாகியிருப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியதும் வெளிநாடுகளுக்கு அடிபணியாது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மீண்டும் நாட்டில் முளைத்துள்ள சோதனைச் சாவடிகளை அகற்றி மக்களை சோதனைக்கு உட்படுத்தாது சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஒக்டோபர் 14 ஆம் திகதியான இன்றைய தினம் குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியிலுள்ள வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வலியுறுத்தினார்.

“அனைவரும் எதிர்பார்க்கும் அமைதியான, கௌரவமான நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்கு முதலில் எதிர் தரப்பினரின் சதித்திட்டங்களுக்கு சிக்கிவிடக்கூடாது. அதேவேளை தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் அனைத்து தரப்பினரினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். சதிகாரர்களின் சதித்திட்டங்களுக்கு அடிபணியாது சிந்தித்து விவேகமாக செயற்பட வேண்டும். எமது தெளிவான கொள்கைகளை நம்பியே அனைத்துக் கட்சிகளும் எம்முடன் கைகோர்க்கின்றனர். அனைவரும் எமக்கு தேவைப்படுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் பலமான கட்சி. அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதால் எமக்கு தேர்தலில் 70 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது”.

இதேவேளை ஸ்ரீலங்காவில் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் மீண்டும் சோதனைச் சாவடிகள் முளைத்துள்ளதுடன், திடீர் தேடுதல் வேட்டைகளும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மீண்டும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததுடன், நாடு தழுவிய ரீதியில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் மூன்று மாதங்களின் பின்னர் அவை முற்றாக் நீக்கிக்கொள்ளப்பட்ட போதிலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் படிப்படியாக மீண்டும் சோதனைச் சாவடிகள் முளைத்து வருவதுடன், பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களும் இடம்பெற்று வருகின்றன.

எனினும் நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தனது ஆட்சியில் சோதனைச் சாவடிகள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார்.

“ துரதிஸ்டவசமான இன்று கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாம் அமைதியான நாட்டை ஏற்படுத்தினோம். அடையாள அட்டைகளை சோதனைக்கு உட்படுத்தாத, பரிசோதனைகளுக்கு உட்படாது கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடிய நாட்டை நாம் மீண்டும் ஏற்படுத்துவோம். நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிய தற்போதைய அரசாங்கமே மீண்டும் சோதனைகளை நடத்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டிருக்கின்றது. அதனால் எமது ஆட்சியின் கீழ் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம்முன்னுரிமை வழங்கி செயற்படுவோம். அதன்ஊடாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சோதனைகள் அற்ற யுகத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றேன்”.

ஸ்ரீலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கு செயற்பட்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை சீர்குழைத்துள்ளதுடன், பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை சிறையில் அடைத்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச குற்றம்சாட்டினார்.

எனினும் தனது ஆட்சியில் படைக் கட்மைப்புக்களையும், புலனாய்வுக் கட்டமைப்பையும் மீள பலமாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாபய உறுதியளித்துள்ளார்.

“புதிய தாராளவாத கொள்கையுடைய அரசாங்கமொன்று ஆட்சியில் இருக்கும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவதில்லை. குறிப்பாக வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு செயற்படும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்திற்காக செயற்படும் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க முடியாது. நாட்டின் தேசியத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க முடியாது. இதனால் வெளிநாடுகளுக்கு தலை அசைக்காத தலைமைத்துவத்தைக் கொண்ட எம்மால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அன்று 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பங்களிப்பை செய்த இராணுவத்தினர் உள்ளிட்ட எமது அரச படையினருக்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தது. அந்த கௌரவத்தை இல்லாதொழித்த தற்போதைய அரசாங்கம் படையினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைத்தது. அதனாலேயே மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கியது. எனினும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று அமையவுள்ள எமது ஆட்சியில் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்காதவாறு பாதுகாப்பு படைக் கட்டமைப்புக்களையும், புலனாய்வுக் கட்டமைப்பையும் பலப்படுத்துவோம். நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாது விட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் எமது நாட்டிற்கு வர மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி