நாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளை அவமானப்படுத்தியவரை எவ்வாறு வெற்றிபெற வைப்பது?

265shares

சர்வதேச சக்திகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கைகோர்த்துக் கொண்டு, போரை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரையும், நாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளையும் அவமானப்படுத்திவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவை எவ்வாறு வெற்றிபெற வைப்பது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் இறையாண்மை மற்றும் அகௌரவத்தை காப்பாற்றுவதற்காகவே மகா சங்கத்தினர் மற்றும் இராணுவத்தினரது முழுமையான நம்பிக்கைக்குரிய வேட்பாளராக தாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் கடும்போக்கு சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய அமைப்பின் தேசிய மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, போர் வெற்றியை கொண்டாடும் வகையில் மஹிந்த அரசாங்கம் ஆரம்பித்த வெற்றிக் கொண்டாட்டங்களை ரணில் அரசாங்கம் தடுத்து நிறத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இறையாண்மைக்கு மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விசேடமாக தேசிய இனம், பிக்குமார்கள் மற்றும் நாட்டிற்காக உழைத்த இராணுவத்தினர் இந்த அச்சுறுதலை எதிர்கொண்டுள்ளனர். எமது கலாசாரம் கடந்த காலங்களாக பெருவீழ்ச்சியை கண்டுள்ளது. அதற்கான காரணங்கள் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.

இராணுவத்தினர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, விசாரணை செய்தமை, எந்தவொரு அடிப்படை விடயங்களற்ற நிலையிலும் பிக்குமார்களை கைது செய்து சிறையில் தள்ளியமை மட்டுமன்றி ஒட்டுமொத்த எமது நாட்டின் கௌரவத்தையும் சிதைக்கின்ற முயற்சிகளே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்ற தருணம்தான் இது எனவும் தெரிவித்திருந்தார்.

பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் வழிநடத்தப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களால் எந்தவொரு பயமும் இன்றி பிக்குமார்களையும், இராணுவத்தினரையும் அவமானப்படுத்தும் சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்ததை அடுத்து தேசிய அபிமானத்தை நாட்டில் ஏற்படுத்தினோம். போர் வெற்றியை முன்னிட்டு நாட்டில் பேரணிகளை செய்தோம். அது வெறுமனே பேரணிகள் அல்ல மாறாக எதிர்கால சந்ததியினர் மத்தியில் நாட்டின் அபிமானத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடாகவே அதனை செய்தோம் எனத் தெரிவித்திருந்தார்.

மேற்குலக சக்திகளினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவால் படையினரினரையும், மகா சங்கத்தினரையும் பாதுகாக்க முடியாது என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அந்த காலகட்டத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, இராணுவத்தினரை விமர்சனம் செய்யும் பல்வேறு விடயங்களை சரத் வீரசேகர என்னிடம் காண்பித்தார். அதற்காக இராணுவச் சிப்பாய்களை நாங்கள் மக்களிடம் அறிமுகப்படுத்தவே இராணுவத்தினன் என்றவர்களை இராணுவ வீரன் என்ற அடையாளத்தைக் கொடுத்தோம்.

ஆகவே இந்த இராணுவத்தினரை அவமானப்படுத்தும் உள்நோக்கமானது, இளைஞர் சமுதாயத்திலிருந்து அவர்களை தூரப்படுத்துவதாகும். இந்த புதிய லிபரல்வாத யோசனை அடங்கிய அமைச்சரவை மற்றும் வெளிநாட்டு சக்திகளால் நடத்தப்படும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிகின்ற அரசாங்கத்தினால் இவற்றை செய்வது ஒன்றும் புதியதல்ல.

இவர்களின் ஆட்சி இருக்கும் வரை இப்படியான சவால்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த நாடு எதிர்கொள்ளும் சவால்களை வென்று கொண்டு எமது இறைமை, கலாசாரம் என்பவற்றை பாதுகாக்கவே நான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளேன். பிக்குமார்கள், மகாநாயக்க தேரர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அபிலாஷைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!