விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்களாம்!

859shares

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்காக 13 அம்ச கோரிக்கைகளை ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து முன்வைத்திருப்பதாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை பரப்பிவரும் அமைப்புக்களில் ஒன்றான புதிய சிங்களே அமைப்பு குற்றம்சாட்டியிருக்கின்றது.

நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்கள் என்றும் புதிய சிங்களே அமைப்பின் தலைவர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் டேன் பிரியசாத் கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் உட்பட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும், சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எப் மற்றும் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

எனினும் வாக்குகளுக்காக தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்படும் எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ஐந்து தமிழ் கட்சிகள் நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவினரை சந்தித்து முறையிட்ட புதிய சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத், இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், டெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எப் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“சஜித் பிறேமதாச இவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் இந்த நாட்டு மக்கள் சஜித்திற்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். சஜித் ஜனாதிபதியானால் இரண்டு நாட்களில் அவரை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் உட்பட கூட்டணி சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளை தடை செய்வதற்காக போராடுவோம். இந்த கட்சிகளை தடை செய்ய இளையோர் அனைவரும் இணைந்திருக்கின்றனர். எம்முடன் சிங்கள தேசத்தை நேசிக்கும் முற்போக்கான தமிழ் இளைஞர்களும் இணைந்திருக்கின்றனர். விக்னேஸ்வரன் உட்பட பிரிவினைவாத தமிழ் கட்சிகளை தடை செய்வதற்கான போராட்டங்கள் தொடரும்”.

தனித் தமிழீழத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது போல், நிபந்தனைகளை முன்வைக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அதே நிலமையே ஏற்படும் என்றும் டேன் பிரியசாத் எச்சரிக்கின்றார்.

“ வடக்கிற்கும் கிழக்கிற்கும் தனிநாடு கேட்டுவந்தவர்களுக்கு எம்மத்தியில் இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மேல் உலகத்தில் தனிநாடு எடுத்துச் செல்ல அவர்களை அங்கு அனுப்பிவைத்தார். அதனால் மீண்டும் ஒரு தடவை விக்னேஸ்வரனுக்கு வாசுதேவ சம்பந்தியாக இருந்தாலும் ஒட்டுமொத்த சிங்களவர்களும் உங்களுக்கு சம்பந்திகளாகிவிட மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிங்களவர்களை ஆத்திரமடையச் செய்ய வேண்டாம். இன மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். தற்போது நிலவும் சமாதானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வடக்கிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அவை குறித்து அரசுடன் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.

அதனைவிடுத்து தனித்தனியே சண்டைகளை ஆரம்பிக்க முயற்சித்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நடந்ததே நடக்கும். நந்திக்கடல் களப்பில் விக்னேஸ்வரன்கள் புதையுண்டுப்போவார்கள். இந்த நாட்டில் எதற்கும் அஞ்சாத படைவீரர்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் இந்த நாட்டை பாதுகாப்பார்கள்”.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும், சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எப் மற்றும் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளை பொது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுக்கும் புதிய சிங்களே அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

“யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமே இந்த யோசனைகளை தயாரித்திருக்கின்றனர். கடவுளே மாணவர் ஒன்றியங்களின் நிலமையைப் பாருங்கள். மாணவர்களே உங்களுக்கும் ஒரு விடையத்தை கூறியாக வேண்டும். தென்பகுதி பிரதேசங்களுக்கு வந்து செல்லமுடியும் என்று மாத்திரம் இனிமேல் சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவ்வாறான யோசனைகளை தயாரிக்கும் போது படித்த புத்திசாலிகளான மாணவர்கள் இதனைவிட பொறுப்புடன் சிந்தித்து பார்த்து செயற்பட வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டாம். இந்த நாட்டில் மீண்டுமொருமுறை இரத்த ஆற்றை பெறுக்கெடுக்க இடமளிக்காதீர்கள்” என் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி