தாயகப்பகுதியில் மாவீரர் தின முன்னேற்பாட்டை தடுத்து அச்சுறுத்தல் விடுத்த இராணுவம்!

56shares

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சிரமதான பணிகள் இடம்பெற்றது . இதன்போது அங்கு வந்த இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகளை தடுத்து நிறுத்துமாறு கோரியதோடு, அவ்வாறு இல்லையேல் கைது செய்ய நேரிடும் என மாவீரர் குடும்பங்களை அச்சுறுத்தி சென்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளை முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீழ் நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை கஞ்சிகுடிச்சாறு ,மட்டக்களப்பு , மாவடி முன்மாரி, தாண்டியடி ,வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீள்நிர்மாணிப்பு குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளை கூறுகையில்,

கார்த்திகை 27 தாயக விடுதலைக்கான ஆகுதியான மாவீரர்களை நினைவுகூரும் முகமாக முன்னேற்பாடுகள் இவ் வருடமும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க இருப்பதனால் இன்று சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இராணுவ தரப்பு அங்கு வந்து சிரமதான பணிகளை இடை நிறுத்த கோரியதாகவும் இல்லையேல் கைது செய்து கொண்டு செல்ல நேரிடும் என அச்சுறுத்தி சென்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும் அத்தோடு அனைவரின் சுய விபரத்தையும் வழங்குமாறும் கோரினர் இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றனர்.

தமிழர் தாயக பிரதேசங்களில் கார்திகை 27 புனித நாளாகவும் அன்று மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சர்வதேசமும் , இலங்கை அரசும் அனுமதியழித்த பின்னரும் இராணுவமும், புலனாய்வு பிரிவும் தடுப்பதேன் என அங்கு இருந்த உறவுகள் கண்ணீர் மல்க எம்மிடம் தெரிவித்தனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க