தாயகப்பகுதியில் அரச திணைக்களங்களின் ஆதரவுடன் தொடரும் காணி அபகரிப்புக்களும் காடழிப்பும்!

24shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் வெளிவயல் குளத்தின் கீழ் அரச செல்வாக்குடனும் பண பலத்துடனும் காடழித்து ஏனைய வயல் நிலங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பாரிய மரங்களையும் பிடுங்கி தடுப்பணை ஒன்றினையும் இல்லாது ஒழித்து காணி ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போதும் பலதரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த விடையம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அரச அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

மன்னாகண்டல் வெளிவயல் குளத்தின் கீழ் காலகாலமாக விவசாயம் செய்து வருகின்றேன் எனது வயலுக்கு மேற்கு பக்கமாக வெளிவயல் குளத்தின் மேலதிக தண்ணீர் பாய்வதற்கான நிலப்பகுதி காணப்படுகின்றது மேலதிக தண்ணீர் எனது வயல்காணிக்குள் வந்து எனது விவசாய நிலத்தினை பாதிக்காத வகையில் பல நீண்டகாலமாக தடுப்பு அணை கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த விடையம் இங்கு விவசாயம் செய்து வரும் அனைவருக்கும் தெரிந்தது. கடந்த ஆண்டு எனது காணிக்கு மேற்குப் பக்கமாக இருந்த மந்து காணியினை மன்னாகண்டலை சேர்ந்த தயா என்பவர் விவசாயம் செய்தார். கடந்த ஆண்டு மேலதிக தண்ணீர் பாயும் இடத்தினை பயன்படுத்தாமல் விவசாயம் செய்த காரணத்தால் எனது விவசாயத்திற்கு பாதிப்பில்லை.

ஆனால் கடந்த 14.10.19 அன்று கனரகவாகனம் (பைக்கோ) பயன்படுத்தி ஏற்கனவே இருந்த தடுப்பு அணையினையும் அகற்றியதுடன் குறித்த குளத்தின் மேலதிக தண்ணீர் பாயும் பிரதேசத்திற்கு குறுக்காக பாரிய வரம்பினை அமைத்து குறித்த பகுதியில் இருந்த பாரிய மருதமரம் உள்ளிட்ட மரங்களை பிடுங்கியுள்ளார். எனவே இவரது இந்த செயற்பாடு எமது விவசாய நடவடிக்கையினை பாதிப்பதுடன் வெளிவயல் குளத்தினையும் பாதிக்கும் எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து எனது விவசாய நடவடிக்கை பாதிக்காத வகையில் ஒத்துளைக்குமாறு கோருகின்றோம் என விவசயா நடவடிக்கையுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,காணிப்பகுதியுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் யாரும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மன்னாகண்டல் கமக்கார அமைப்பின் தலைவர் செல்லையா பாலசிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் பிரதேசம் ஒரு தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நாங்கள் அரசாங்க அதிபருக்கும் கடிதம் அனுப்பியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ம.தயாபரன் என்று கூறப்படுபவர் காணிகளை பிடிப்பதும் காடுகளை அழிப்பதுமாக இருக்கின்றார். இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் ஒருவராலும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

தற்போது வெளிவயல்குளம் எனும் ஒரு குளம் அது எட்டு ,ஒன்பது தலைமுறையாக இருந்து வருகின்றது. அதில் ஒரு அணையினை கட்டி எங்கள் வயல் வெளிகளுக்கு தண்ணிபாயது தண்ணீர் ஓடி வீதிக்கு வந்து தான் தண்ணீர் திரும்பி வெளியேறும் தற்போது இவர் அந்த பகுதியில் உள்ள வான்பகுதியில் நின்ற மருதமரங்கள் மற்றும் பெரிய மரங்கள் அனைத்தினையும் தள்ளி எங்கள் வயல்களுக்கு மேலதிக தண்ணீர் வராது கட்டிவைத்த அணைக்கட்டினையம் உடைத்து பரவி கனரக வாகனங்களை பயன்படுத்தி நல்ல கட்டு வரம்புகளும் போட்டு தான் விவசாயம் செய்வதற்கான ஒழுங்கினை செய்து வைத்துள்ளார்.

இதன் காரணமாக தண்ணீர் மீண்டும் திரும்பி குளப்பகுதிக்கு சென்று குளக்கட்டு எல்லாம் உடைத்து குளம் அழியும் நிலை ஏற்படும் என்பதை சகல அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என்கிறார். ஏற்கனவே இருட்டுமடு பகுதியிலும் காடழிப்பு காணி அபகரிப்பு இடம்பெற்றதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். தற்போது மன்னாகண்டலிலும் இடம்பெறுகிறது.

இங்கு வசதி படைத்தவர்களது இந்த செயற்பாடுகளை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமையானது அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே செல்வந்தர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதே ஏழை மக்களின் கருத்தாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க