ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட முப்படையினருக்கு சர்வதேச அரங்கில் முக்கிய இடம்: ஜனாதிபதி மைத்ரி பெருமிதம்!

21shares

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும், பொலிசாரும், மற்றும் புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புகள் தொடர்பில் ஸ்ரீலங்காவின் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

போர் வெற்றியின் மூலம் கிடைத்த அனுபவங்கள் காரணமாக ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட முப்படையினருக்கு சர்வதேச அரங்கில் முக்கிய இடமொன்று கிடைத்திருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவ தலைமையகத்தை இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால இந்த பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான பெலவத்த அக்குரேகொட என்ற இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத் தலைமையகம் இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்காவின் அரச தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய தலைமையகத்தை திறந்து வைத்தார். இதற்காக புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஸ்ரீலங்காவின் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

பெலவத்த, அக்குரேகொட என்ற இடத்தில் 77 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைத் தலைமையகத்திற்கு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடிக்கல் நடப்பட்டது.

இதற்கான உத்தேச செலவு 53.3 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய ஸ்ரீலங்காவில் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டிட நிர்மாணத் திட்டமாகவும் இந்த தலைமையக கட்டடம் இடம்பிடித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் அதிநவீன பாதுகாப்பு முறைமைகளையும் இந்த கட்டிடத்தொகுதி கொண்டுள்ளது.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இராணுவ தலைமையகத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தலைமை அலுவலகங்கள் விரைவில் இந்த கட்டிடத்தொகுதிக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் 50 மில்லியனுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டு வருவகின்றமையும் இங்கு சுட்டிக்காடடத்தக்கது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்பேணல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் மேற்கொண்டுவரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா இராணுவமும், கடற்படையினரும், விமானப் படையினரும் எமது நாட்டில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக உலகின் மிகச் சிறந்த படைகளாக மிக சிறப்பான சேவையை ஆற்றி வருகின்றனர். ஒழுக்கத்தையும், சட்டத்தையும் மதிக்கும் தொழில்சார் நிபுணத்துவம்மிக்க இராணுவங்களாகவும் எமது முப்படையினரும் உலக நாடுகள் முன் திகழ்கின்றனர்.

அதேபோல் நீங்களும், நானும் நேசிக்கும் எமது தாய்நாட்டின் ஒற்றையாட்சியையும், ஆட்புல ஒருமைப்பாட்டை தேசிய பாதுகாப்பையும் பாதுகாத்த வண்ணம் அவற்றை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் உயிர் தியாகங்களையும் செய்து சேவையாற்றி வருகின்றனர். 80 ஆம் ஆண்டுகளில் நடுப்பகுதியில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான யுத்தம் காரணமாக எமது இராணுவம் அதற்கு முன்னர் இருந்ததை விட போர் ஆற்றல்களுடன், வீரமான இராணுவங்களாக திட்டமிட்ட போர் தந்திரிகளை வகுத்து இலக்கை துரிதமாக அடைவதற்கான படை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் உலகின் மிகச் சிறந்த படைகளாக மாற்றமடைந்திருக்கின்றனர்.

27 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உயிரைத் தியாகம் செய்த எமது அனைத்து படையினரையும் நாம் இன்று நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடன் யுத்தத்தின் போது அவையவங்களை இழந்த படையினரையும் நாம் நினைவுகூறுகின்றோம். அவர்களுக்கும் அரசினதும், நாட்டு மக்களினதும் கௌரவத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் யுத்தத்தின் மூலம் கிடைத்த அனுபவம் காரணமாக எமது முப்படையினரும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இராணுவமாக மதிக்கப்படுகின்றனர். அதனாலேயே ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிகளுக்கும் எமது படையினர் உள்வாங்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது 05 வருட பதவிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றி கொள்வதற்கு முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் தனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனையடுத்து இராணுவ அதிகாரிகளுக்கான சேவை பதக்கங்களும் சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தளபதிகள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்