புதிய ஜனாதிபதிக்கு ரெலோ அமைப்பின் தலைவர் விடுத்துள்ள வேண்டு கோள்!

155shares

புதிய ஜனாதிபதி ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக்கொண்டு மக்கள் மனங்களை வெல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்று குறித்த கட்சியினால் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கையொப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்று 7ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இத்தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்கள் தமது ஜனநாயக கடமையை ஒற்றுமைப்பட்டு வெளிப்படுத்தியுள்ளமையும் என்னென்ன காரணங்களுக்காக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மக்களை உரிமையோடு கேட்டுக் கொண்டதோ அக்காரணங்கள் அனைத்தும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் வெளியப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்களின் உணர்வுகளும் உள்ளக்கிடக்கைகளும் ஒவ்வொரு வாக்குகளினாலும் உலகத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எமது மக்களின் நீண்டகால அபிலாசைகள் தீர்த்துவைக்கப்படாத அன்றாட பிரச்சனைகள், கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள எதிர்கால வாழ்வு என இவையெல்லாம் ஏமாற்றங்களாக தொடர்வதின் நீட்சியே வாக்குகளுடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதும் உதாசீனப்படுத்துவதும் தெரிந்தும் பெரும்பான்மை இனம் துணை நிற்பது வருத்தமானதே.

சிங்கள தலைமைகள் சிங்கள பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டு அரசியல் நன்மைகளை அனுபவிக்கவே விரும்புகின்றார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள தேசம் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும் என கோருவதில் தவறொன்றும் காணமுடியாது. புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சிங்கள மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களதும் தெற்கின் சிங்கள மக்களதும் சமகாலத்து ஆவாக்கள் வேறு வேறானவை என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது. வெவ்வேறான பார்வைகளினூடாகவும் அணுகு முறைகளினூடாகவுமே தமிழ் சிங்கள மக்களின் பிரச்சனைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி தனது 5 வருட பதவிக்காலத்தில் இயலுமான வரை கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகளை பாடமாக்கி கொண்டு திருத்தங்களுடன் பயணித்தால் நாட்டின் ஒவ்வொரு பிரஜையைக்கும் வாழ்வுண்டு என கருதுகின்றேன்.

இந்நிலையில் தமிழ் மக்களின் எண்ணச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு இரு பிரதான வேட்பாளர்களில் சிறந்தவர் யாரென எமது மக்களிடம் நாம் கூற அதை சிரமேல் ஏற்று தமிழர் ஒற்றுமையை மிண்டும் ஒருதடவை நிரூபித்துக் காட்டிய எமது உறவுகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

வீட்டுக்கு வீடு ஊடகங்கள் ஊடாக எமது கோரிக்கைகளை எடுத்து சென்று மக்களிடம் கொண்டு சேர்த்து அரும்பணியாற்றிய ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் மனமுவந்து நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்.

மேலும் பெரும்பான்மை தமிழ் மக்களால் கோட்டாபாய ராஜபக்ச நிராகரிக்கப்பட்டாலும் இன்னுமொரு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இது அரசியல் ரீதியான முடிவே தவிர இன ரீதியானதல்ல என்பதை புரிந்தவராக புதிய ஜனாதிபதி ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதி என்பதனை ஏற்றுக் கொண்டு மக்கள் மனங்களை வெல்ல எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க