புதிய ஜனாதிபதியாக கோத்தாபய; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சம்!

49shares

ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் நீதிகோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் எவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் தமது உறவுகள் தொடர்பாக புதிய அரசாங்கம் பதில் வழங்கும்வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரான மரியசுரேஸ் ஈஸ்வரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலப் பகுதியில் கொடூரமான முறையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கைதுசெய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உட்பட உறவுகளைத் தேடி தமிழர் தாயக பகுதிகளில் மூன்று வருடங்களாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறுமாறு வலியறுத்தி நேற்று 986 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவரும் வெள்ளைவேன் கடத்தல் காரன் என அடையாளப்படுத்தப்பட்டவருமான கோட்டாபய ராஜபக்ச நேற்று காலை புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இந்த ஆட்சி மாற்றம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளரான மரியசுரேஸ் ஈஸ்வரி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீலங்கான் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலத்திலே தமது உறவுகள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதால் அவரே இதற்கு பதில் வழங்க வேண்டும் என்றும் உறவுகள் இழந்த மக்கள் புதிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தை அடுத்து வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு சர்வதேசமே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட உறவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பது தொடர்பாக எதிர்காலத்தில் கூடி தீர்மானிக்கவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளரான மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க