வைகோ, தொல் திருமாவளவன் போன்றோர் மீது பாய்ந்த நாமல்! இலங்கைக்கு விசேட அழைப்பு

378shares

இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக நாமல் ராஜபக்ஜ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை என அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை.

மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன்.

அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை.

2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும்.

அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார்.

அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால் , எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.

இதையும் தவறாமல் படிங்க