கோத்தாபய ராஜபக்ஸ மனித உரிமைகளையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும்; அமெரிக்கா!

18shares

ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாக தமது கடமைகளை ஆரம்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ மனித உரிமைகளையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களை வலியுறுத்தியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவில் நவமப்ர் 16 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் போன்ற கடப்பாடுகளை உறுதிப்படுத்த முன்வரமாறும் ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மைக் பொம்பியோ அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் பழமையான ஜனநாயகத்திற்கு ஏற்ற ஒரு சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஸ்ரீலங்கா தனது ஜனநாயகத்தின் வலிமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொம்பியோ, அமைதியான தேர்தலை ஊக்குவித்ததற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களை பாராட்டியும் உள்ளார்.

அனைத்து நாடுகளும் வளரக் கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வளர்ப்பது, நல்லாட்சியை உறுதிப்படுத்துவது மற்றும் நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றியை பாராட்டியுள்ள ஜப்பானிய பிரதமர் நேற்று இடம்பெற்ற அவரது பதவியேற்புக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ஜப்பானுக்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ஜப்பானிய பிரதமர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

ஜனதிபதி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும், சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைந்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு துறைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நடத்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருசில வன்முறை சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் ஸ்ரீலங்கா மக்கள் தமது அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் தேர்தலில் முழு அளவில் பயன்படுத்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்