கிளிநொச்சியில் வீதி ஒன்றுக்கு உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயர்! கிளர்ந்தெழுந்த மக்கள்!

230shares

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட திருநகர் வடக்கில் உள்ள வீதி ஒன்றுக்கு ஏற்கனவே இருந்த பெயரை நீக்கிவிட்டு உயிரோடுள்ள அரசியல்வாதி ஒருவரின் பெயரினை வைத்து தங்களுக்கு ஆவணங்கள் அனுப்பியமைக்கு பிரதேச பொது மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கரைச்சி பிரதேச சபையிடம் வினவிய போது சோலை வரி விதிப்பதற்காக ஆதனங்களை இலகுவாக இனம்காணும் பொருட்டு சட்டத்திற்கு முரணாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருநகர் வடக்கு கிராமத்தில் உள்ள ஒரு வீதி இதுவரை காலமும் கமல் வீதி என அழைக்கப்பட்டு வந்தது. 1991 ஆம் ஆண்டு கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது மரணமடைந்த சதானந்தம் உபயசேகரம் என்பவரின் மற்றுமொரு பெயரான கமல் எனும் பெயரால் அழைக்கப்பட்டு வந்த வீதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னிருந்து பசுபதிபிள்ளை வீதி என பெயர் மாற்றப்பட்டு கரைச்சி பிரதேச சபையினால் குறித்த வீதியிலுள்ள பொது மக்களுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது பொது மக்கள் மத்தியில் கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது. ஒரு வீதிக்கு பெயர் வைப்பதாக இருந்தால் கிராமமட்ட அமைப்புகளின் கோரிக்கை பெறப்பட்டு சபையின் அனுமதிக்கு விடப்பட்டு சபைத் தீர்மானம் பெறப்பட்டே பெயர் சூட்டப்படல் வேண்டும்.

அதுவும் பெயர் இல்லாத ஒரு வீதிக்கு. இதனை தவிர உயிரோடுள்ள ஒருவரின் பெயர் வீதிக்கு வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கரைச்சி பிரதேச சபை உடனயடியாக உயிரோடுள்ள அரசியல்வாதியின் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் பழைய பெயரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க