சஜித்தின் தோல்விக்கு இதுவா முதல் காரணம்...?

19shares

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வயாகத்தில் வைத்து அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்த பொறுப்பற்ற ஒரு வார்த்தைப் பிரயோகமே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைய அடிப்படையாக அமைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான மனு இன்றைய தினம் உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டது.

தலைமை நீதியரசர் சிசிர டி ஆப்ரு தலைமையிலான, மாது பெர்னாண்டோ, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட இந்த மனுவை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென்றும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கூற்றால் நீதிமன்றம் அவமதிக்கபப்ட்டிருப்பதாக தெரிவித்து அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கின்றது.

இந்த நிலையில் இன்றைய விசாரணையில் முன்னிலையாகியிருந்த ரஞ்சன் ராமநாயக்க விசாரணை முடிந்து நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

“2015 ஆம் ஆண்டு 60 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை ஆட்சிபீடம் ஏற்றினர். திருடர்களை பிடிப்பதற்காகவே மக்கள் எமக்கு ஆட்சி அதிகாரத்தை அன்று வழங்கியிருந்தனர். எனினும் திருடர்களை பிடிக்க என வந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமரை திருடன் என்றும் பிரதமர் ஜனாதிபதியை திருடன் என்றும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர்.

100 நாள் ஆட்சியின் போது பிணைமுறி மோசடி இடம்பெற்றது. அதனைவிட பாரிய மோசடிகள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் இடம்பெற்றன. எனினும் அவை மூடி மறைக்கப்பட்டு பினைமுறி தொடர்பான பிரச்சினை மேலே எழுந்தது.

அவ்வாறு 100 நாளைத் தொடர்ந்து ஒக்டோபரில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினையும் நாம் வெற்றி கொண்டோம். எனினும் தொடர்ந்து மட்டக்களப்பில் இடம்பெற்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை மற்றும் ஏப்ரெல் 21 இல் சஹ்ரானின் தாக்குதல்கள் காரணமாக தேர்தலில் நாம் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தன.

அதனைவிடுத்து ஒவ்வொரு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவிக்கும் காரணங்கள் எமது தோல்விக்கு அடிப்படையாக அமையவில்லை. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இந்த தாக்குதல் இடம்பெறும் எனத் தெரியும், ஆனால் இந்தளவிற்கு பாரதூரமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கவில்லையெனத் தெரிவித்திருந்தார.

இதனால் ஸ்ரீலங்கா வாழ் மக்கள் இவ்வாறானவர்களுக்கா நாம் நாட்டைக் பொறுப்புக் கொடுத்தோம் என நினைத்து விட்டார்கள். இதுவே நாம் தேர்தலில் தோல்வியை சந்திக்க பிரதான காரணம் என நினைக்கின்றேன். என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...