கரவெட்டி சண்டில்குளம் பகுதி வீடுகளுக்குள் வெள்ளம், பிரதேச சபை தவிசாளரின் அசமந்தப் போக்கே காரணம் - மக்கள் விசனம்

48shares

கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் இருந்து சண்டில்குளம் வரை செல்லும் வீதிக்கு 3 அடி உயரமான கொங்கிறீற் வீதி அமைக்கப்பட்டதால், மதவின் ஊடாக வெள்ளம் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாதரணமாக குளமும் நீர் வழிந்ததோடும் பாதையும் இருந்த பாதையில் கரவெட்டி பிரதேச சபையினரால், பொருத்தமற்ற முறையில் கொங்கிறீற் வீதி அமைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக மக்களால் நேரடியாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் தெரிவித்தும் இது குறித்த சரியான நடவடிக்கையை குறித்த பிரதேச சபையினர் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்,

கடந்த வருடம் இது குறித்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கையொப்பம் இட்டு கடிதங்கள் கொடுக்கப்பட்ட போது, இந்த வருடம் (2019) நிதி ஒதுக்கி அதனைக்கு சீர் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்த போதும், இவ்வருடம் குறித்த விடயம் ஏதும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்றும், மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, ஒதுக்கப்படட நிதி யாருடைய பொக்கற்றை நிரப்பியுள்ளதோ என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது டெங்கு பெருகிவரும் நிலையில், சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலே வழக்கு தொடுக்கும் சுகாதார பரிசோதகர்கள், இரு வாரத்துக்கு மேலாகியும் தண்ணீர் தேங்குவதையிட்டு தவிசாளர் மீதல்லவா வழக்கு போட வேண்டும் எனவும், ஏன் இன்னும் அவர் மீது வழக்கு போடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னைய காலங்களில் மழை பெய்தால், ஒரிரு நாட்களில் தண்ணீர் ஓடி, வல்லை ஆற்றுடன் கலக்கும். ஆனால் தங்களின் வேண்டுகோள் இல்லாமல் வீதியைப் புனரமைப்பதாக கூறி, குளத்திற்கு பொருத்தமில்லாத கொங்கிறீற் வீதி போடப்பட்டதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது.

மக்கள் படும் துன்பங்கள் குறித்து, பிரதேச சபை தலைவர் ஐங்கரன் போன்ற குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருக்கும் அதிகாரிகளுக்கு தெரியவராது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் கைகளில் பாதணிகளை ஏந்தியவாறு பரீட்சைக்குச் செல்கிறார்கள்.

தற்போது இந்த வீதியால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோமீட்டர் தூரம் சுற்றியே பிரதான வீதிக்கு செல்லவுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக உரியவர்கள் உடனடியாக கவனம் எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வீதியை பொருத்தமற்றதாக அமைத்து, ஊழல் புரிந்த தவிசாளர் மீது உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்த விளக்கமொன்றை வழங்குவதற்கு பிரதேச இணைப்புக் குழுக்கூட்டத்திற்கு தம்மையும் அழைக்க வேண்டுமென கரவெட்டி பிரதேச செயலரை தாம் கேட்டுக்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...