மூன்று கூறுகளாக பிளவடைந்தது ரணிலின் கட்சி!

49shares

ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிளவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பேசி எமக்கு எந்தவித பயனும் இல்லை. அதனால் ஒன்றும் நடக்கப்போவதும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி என்பது மிகப் பழைய கட்சி. அந்தக் கட்சிக்குள் காலத்திற்கு காலம் பிரச்சினைகள் எழும் போது அவர்கள் அதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியினை குழப்பத்திற்குள் தள்ளிவிட வேண்டும் என்று நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரே தமது கட்சியினை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகையினால் தற்போது வெளியில் இருந்து கொண்டு அவற்றை வேடிக்கை பார்த்தால் மாத்திரம் போதும். ஐக்கிய தேசியக் கட்சியினுள் மூன்று குழுக்கள் உள்ளமை தற்போது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் தான் கட்சித் தலைவர் என்கிறார். ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அதன் தலைவராக சபாநாகயர் கரு ஜயசூரியவை நியமிக்கப்போவதாக அறிவித்துவருகின்றனர். இதற்கமைய அந்தக் கட்சிக்குள் மூன்று குழுக்கள் உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது தலைமைத்துவமொன்று இல்லையென்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியவந்துள்ளது. அத்தோடு தாம் மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு மூன்றாக உடைந்துள்ள கட்சியனை மீண்டும் சரிசெய்யவோ மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடத் தேவையில்லை.

அவர்களது உட்பூசல் பிரச்சினைகளை அவர்களையே தீர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு எம்மீது நம்பிக்கை வைத்த மக்களை வெற்றிபெறச் செய்வதே எமது ஒரே எதிர்ப்பார்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தினை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே சீரழித்துவிட்டதாகவும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால தெரிவிக்கின்றார்.

இதனால் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு மாற்றமொன்றினை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்திருப்பதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை ஐக்கிய தேசியக் கட்சி சீரழித்துவிட்டது. நீதிமன்ற கட்டமைப்பின் மீதான நம்பிக்கையானது தற்போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பினுள் இருந்து கொண்டு முழுமையாக நீதிமன்றத்தில் தலையிட்டு சுயாதீன ஆணைக்குழுக்களில் அங்கம் வகித்த அனைவரிடத்திலும் தலையீடு செய்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.

19ஆவது அரசியலமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தலையீடு செய்துள்ளனர். அதனால் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்த அந்த ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எமக்கு புதிதாக அரசியலமைப்பு மாற்றமொன்றினை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமெனின் மூன்றிலரண்டு பெரும்பான்மை அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...